தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 500 துணை மின்நிலையங்கள் அமைப்பு – பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தகவல்

சென்னை

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 500 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் சபா.ராசேந்திரன் நெய்வேலி தொகுதி மாளிகம்பட்டு ஊராட்சி, மாளிகம்பட்டு குடியிருப்பு தெற்கு தெருவிற்கு தனியாக மின்மாற்றி அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், இந்த கேள்வி இங்கு வரும் முன்பே நீங்கள் குறிப்பிட்ட மின்மாற்றி செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. மாளிகம்பட்டு குடியிருப்பு தெற்கு தெருவில் உள்ள மின்மாற்றி மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட மின்மாற்றியில் 4 மேல்நிலை நீர்தேக்க தொட்டி மின் இணைப்புகளும், 180 வீட்டு மின் இணைப்புகளும் உள்ளது. இந்த மின்மாற்றியில் ஆய்வு செய்த போது அதிக மின்பளுவுடன் இயங்கிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.மேலும் உறுப்பினர் மின் இணைப்பு குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

மின்இணைப்பு பெற அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 500 துணை மின்நிலையங்களை அமைத்து இருக்கிறோம். துணை மின்நிலையங்களை அமைத்து தர தயாராக இருக்கிறோம். இதற்கு இடத்தை தேர்வு செய்து தந்தால் எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு அமைத்து தரப்படும் என்றார்.