சிறப்பு செய்திகள்

தமிழக சட்டப்பேரவை வரும் 14ம்தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது

சென்னை

61 வருடங்களுக்கு பிறகு பேரவை கூட்டம், மாற்று இடமான கலைவாணர் அரங்கில் வரும் 14-ம்தேதி கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் மற்றும் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த மார்ச் மாதம் 9-ம்தேதி தொடங்கி, 24-ம்தேதி வரை நடைபெற்றது. சட்டப்பேரவை விதிகளின்படி இந்த மாதம் 24-ம்தேதிக்குள் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும்.

இதனை தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக தற்போது பேரவை கூட்டம் நடக்கும் இடத்தில் இடநெருக்கடி இருக்கும் என்பதால், மாற்று இடத்தில் கூட்டத்தை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி கலைவாணர் அரங்கில் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேரவை தலைவர் ப.தனபால் தலைமையில், பேரவை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

மேலும் சில இடங்களும் பரிசீலனையில் உள்ளதாக அப்போது பேரவை தலைவர் தெரிவித்தார். இந்நிலையில்  பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு பிரிவு 174 (1)-ன் கீழ்,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2020-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14-ம் நாள், திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலை, ஓமந்தூரார் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டி இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி வரும் 14-ம்தேதி கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் நடைபெறுகிறது. அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என முடிவு செய்யப்படும். இதனை பேரவை தலைவர் அறிவிப்பார்.