தற்போதைய செய்திகள்

தமிழக மக்களின் தேவைகளை இரட்டை இலை பூர்த்தி செய்யும்-அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை

தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை இரட்டை இலை பூர்த்தி செய்யும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதிபட தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

திமுக என்ற தீய சக்தியை அழிக்க புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார். அப்போது இளைஞர் பட்டாளம் புரட்சித்தலைவர் பின்னால் அணிவகுத்து நின்றது. அதுமட்டுமல்லாது புரட்சித்தலைவர் புனித ஆட்சி மலர இளைஞர்கள் உறுதுணையாக இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்து நாட்டு மக்களுக்காகவும், இளைஞர் பட்டாளத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். இந்தியாவிலேயே ஏன் உலக அரசியல் வரலாற்றில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை என்ற ஒரு அணியை உருவாக்கினார்.

அந்த அணியில் 36 லட்சம் இளைஞர், இளம்பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். இன்றைக்கு ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தில் ஏறத்தாழ 44 சதவீதம் பேர் இளைஞர்கள் இருக்கிறார்கள். வேறு எந்த இயக்கத்திலும் இது போன்று கிடையாது.

திமுகவை எடுத்துக்கொண்டால் ஸ்டாலின் தலைவர், அவரது சகோதரி கனிமொழி மகளிரணி செயலாளர், அவரது மகன் உதயநிதி இளைஞரணி செயலாளர். இப்படி ஒரே குடும்பத்துக்குள் திமுகவை கூறு போட்டு வருகின்றனர்.

ஸ்டாலின் ஊர் ஊராக சென்று நான் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் குறைகளை தீர்ப்பேன் என்று மனு வாங்குகிறார். கடந்த 4 ஆண்டுகளில் தனது தொகுதிகளில் இதுபோன்று மனு வாங்கினாரா? ஏற்கனவே கிராமசபை கூட்டம் நடத்தி மக்கள் குறைகளை போக்குவேன் என்று கூறினாரே? யார் குறையை போக்கினார். இவர் மனு மட்டும் தான் வாங்க முடியும் ஆனால் மக்களின் குறைகளை அம்மாவின் அரசு தான் தீர்க்கும்.

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி இருந்தது. மதுரையில் மு.க.அழகிரி ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது.. அப்போது துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின் மதுரை பக்கமே வர முடியவில்லை.

ஏன் இதே மதுரையில் அரசு விழா நடைபெற்றது. அழகிரி மிரட்டலுக்கு பயந்து அந்த விழாவை ரத்து செய்தார் ஸ்டாலின். அதன் பின் மீண்டும் 2011-ல் அம்மா ஆட்சிக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் சுதந்திரமாக மதுரைக்கு வந்தார். இதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வில்வ இலை நோயை போக்கும், வேப்பிலை பில்லி சூனியத்தை போக்கும், ஆனால் இரட்டை இலை தமிழ்நாட்டு மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்ற தாரக மந்திரத்தை மக்களிடம் எடுத்துக் கூறி கழகத்திற்கு வெற்றி வரலாறு படைப்பீர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சக்தி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர.