தற்போதைய செய்திகள்

தமிழக ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அஞ்சலி

தருமபுரி, ஜூன் 7-
ஜம்மு- காஷ்மீரில் வாகன விபத்தில் மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் பூபதி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு ஒரு தம்பி, தங்கை உள்ளனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ராணுவ வீரர் பூபதி சொந்த ஊருக்கு வந்து தனது தங்கை திருமணத்தை நடத்தி விட்டு மீண்டும் பணிக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் ராணுவ வீரர் பூபதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு சொந்த ஊரான கம்மாளப்பட்டிக்கு ராணுவ வாகனம் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழக, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி, சார் ஆட்சியர் பிரதாப், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்ப்பாளர் புஷ்பராஜ் மற்றும் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க பூபதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ வீரர் பூபதியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.