சிறப்பு செய்திகள்

தமிழ்நாட்டு மக்களை பற்றி சிந்திக்காதவர் ஸ்டாலின் – முதலமைச்சர் கடும் தாக்கு

சென்னை

தமிழ்நாட்டு மக்களை பற்றி சிந்திக்காதவர் ஸ்டாலின் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புரெவி புயல் மற்றும் கனமழையால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: பூம்புகார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட துறைமுகங்களில் தூண்டில் வளைவு வைக்காததால் முகத்துவாரம் …

பதில்: அம்மாவின் அரசு வந்த பிறகு தான் அதிக தூண்டில் வளைவுகளை நாங்கள் அமைத்திருக்கிறோம். கன்னியாகுமரியிலிருந்து இங்கு வரைக்கும் அதிகமான தூண்டில் வளைவுகளை அமைத்த அரசு அம்மாவின் அரசு. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, அங்கிருக்கும் மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் தூண்டில் வளைவு அமைக்கிறோம். ஒரே நேரத்தில் எல்லா பணிகளையும் செய்வது என்பது இயலாத ஒன்று. அதற்கு தேவையான நிதி தேவை, நிதி ஆதாரம் இருந்தால்தான் அனைத்து பணிகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். இருந்தாலும், மீனவ மக்களின் பாதிப்பை அறிந்து, அரசு அதற்குண்டான பணிகளை செய்து கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து, தூண்டில்வளைவுகளை அமைக்க முடியுமோ, அங்கெல்லாம் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: நீர்ப்பாசனத்திற்கு, தனி அமைச்சகம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்களே?

பதில்: அது முதலமைச்சரிடம்தான் இருக்கிறது, கவலைப்படத் தேவையில்லை.

கேள்வி: ஆயிரக்கணக்கான வேளாண் பெருமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் செய்தார்கள், பி.ஜே.பி. ஆளக்கூடிய கர்நாடகா மாநிலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர் மவுனம் காக்கிறார் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்தும் …

பதில்: சட்டத்தில் என்ன தவறு என்று நீங்கள் சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன். ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த மூன்று சட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் எதில் பாதிக்கிறார்கள்? சொல்லுங்கள். நான் தமிழ்நாட்டு விவசாயியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அகில இந்திய அளவில் வேறொரு தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறார், அவர் பேசுவார். ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார். தமிழக விவசாயிகள் இந்த மூன்று சட்டங்களால் எந்த சட்டத்தில் பாதிக்கப்படுகிறார்கள், சொல்லுங்கள்.

இதே திமுக 2016-ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 23, 24-வது subject-ல் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும். இந்த கொள்கையின் அடிப்படையில், தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள், இடைத்தரகர்களின்றி, (மற்ற மாநிலங்ககளிலெல்லாம் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அந்த இடைத்தரகர்களை அகற்ற வேண்டுமென்று தான் மத்திய அரசாங்கம் இந்த வேளாண் சட்டத்தையே கொண்டு வந்திருக்கிறது) தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தை விலைக்கேற்ப உற்பத்தி செய்து பயன்பெறுவதற்கு உதவும் வகையில், உற்பத்தியாளரையும், வாங்குபவரையும் இணைப்பதற்கு அரசும் உற்பத்தியாளரும் இணைந்து நிர்வகிக்கும் வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும்.

இந்த அமைப்பின் மூலம் அன்றாடம் சந்தை விலையை விவசாயிகள் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் விற்கமுடியும் என்று தான் சொல்லியிருக்கிறார். அதைத்தான் மத்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. நாங்களும் 2019-ல் கொண்டு வந்திருக்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.