சிறப்பு செய்திகள்

தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த கட்சி தி.மு.க. – முதலமைச்சர் ஆவேசம்

சென்னை

ஊழல் செய்வதில் இந்தியா முழுவதும் கொடிகட்டி பறந்ததோடு தமிழ்நாட்டையே தலைகுனிய வைத்த கட்சி தி.மு.க. என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

தி.மு.க தலைவர் ஸ்டாலின், நான் முதலமைச்சராக பதவியேற்ற காலத்திலிருந்தே, இந்த ஆட்சி ஒரு மாதத்தில் போய்விடும், இரண்டு மாதத்தில் போய்விடும் என தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து இப்படித்தான் பேசிக் கொண்டே இருப்பார். அவரால் இறுதிவரை ஆட்சிக்கு வர முடியாது.

நல்ல எண்ணம் இருந்தால் தானே வர முடியும். ஒரு விவசாயி முதலமைச்சரானால் எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தேன். நான் சாதாரண மனிதன், மற்றவர்களைப் போல மிட்டா மிராசோ, பெரிய பின்புலமோ இல்லை. மக்கள் தான் நமது பின்புலம். நமது கட்சியை உடைக்கப் பார்த்தார்.

ஆட்சியை கவிழ்க்க பார்த்தார். நமது கட்சியை உடைத்தால், தி.மு.க தான் சர்வாதிகாரம் பொருந்திய கட்சியாக இருக்கும் என்று கனவு கண்டார். அவரது கனவு பலிக்கவில்லை. சாதாரண மனிதன் உழைத்தால் உயர்ந்த பதவிக்கு வர முடியும்.

ஸ்டாலினுக்கு உழைப்பு கிடையாது, திறமையும் கிடையாது. உயர்ந்த பதவிக்கு எப்படி வர முடியும். இரவல் வாங்கி உயர்ந்த பதவிக்கு வர முடியாது. சொந்த அறிவு இருக்க வேண்டும், திறமை இருக்க வேண்டும். நம்பிக்கை தான் மனிதனின் பலம்.

இந்த கொடி எப்படி பறக்கிறது, காற்றினால் பறக்கிறது. காற்று கண்ணுக்கு தெரிகிறதா? இல்லை. இப்படி கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்கின்ற கட்சி இந்தியாவிலேயே திமுக கட்சி தான்.

நீங்கள் வந்து எங்களை பற்றி பேசி கொண்டிருக்கிறீர்கள். 2ஜி ஸ்பெக்ட்ரமில் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து கொள்ளையடித்த கட்சி திமுக. முதலில் திமுக தமிழ்நாட்டில் தான் கொள்ளையடித்தார்கள். பின்னர் இந்தியா முழுவதும் கொள்ளையடித்தார்கள். இதனால் தமிழ்நாட்டை தலைகுனிய வைத்து விட்டனர் திமுகவினர்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான். கருணாநிதி அவர்களின் ஆட்சியில் தான் ஊழல் என்ற சொல்லே பிறந்தது. நான் ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டேன். எங்கள் மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நேருக்குநேர் விவாதிப்போம்.

நான் அதற்கு பதில் சொல்ல தயார். எது தவறு, எது சரி என்று மக்களே முடிவு செய்யட்டும். ஒரு சாலைக்கு டெண்டரே விடப்படவில்லை, அதில் ஊழல் என்று ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் எதையும் ஆராய்ந்து, படித்துப் பார்த்திருந்தால் உண்மையான தலைவர். பொய்யான அறிக்கையை கொடுத்து ஊழல், ஊழல் என்று பேசி வருகிறார். புதிய தலைமைச் செயலகம் டெண்டர் விட்டது ரூ.210 கோடி, பணம் வழங்கியது
ரூ.430 கோடி இது தான் ஊழல். ஒப்பந்தம் போட்டு டெண்டர் விடுவார்கள். அதன்படி வேலை செய்வார்கள். அரசாங்கத்தில் இப்படி தான் நடக்கிறது.

நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். இரண்டு துறைகளிலும் எஸ்டிமேட் போட்டு தான் டெண்டர் விடுவார்கள். பணி முடியும் போது எஸ்டிமேட்டை விட 5 முதல் 10 சதவிகிதம் வரை கூடுதலாக இருக்கும்.

ஆனால் திமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் ஒப்பந்த தொகையை விட 110 சதவிகிதம் உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். இது தான் ஊழல். இவர் என்னை ஊழல் செய்தேன் என்று சொல்கிறார். நான் என்னுடைய உறவினருக்கு டெண்டர் கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

திமுக ஆட்சி காலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 1969-ல் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தில் மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்களில் யார், யாரெல்லாம் டெண்டரில் பங்கேற்கலாம் என கோரியிருந்தார்.

அதற்கு மத்திய அரசு தெளிவாக சொல்லியிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கணவன் அல்லது மனைவி, தாய், தந்தை, அக்காள் தங்கை, அண்ணன் தம்பி, மகன் மகள் ஆகியோர் டெண்டரில் பங்கேற்கக் கூடாது என்று தெரிவித்திருந்தது. மற்றவர்கள் தகுதியிருந்தால் டெண்டரில் பங்கேற்கலாம். நாங்கள் விட்டது சர்வதேச டெண்டர்.

இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். முன் வைப்புத்தொகையை ஆன்லைனில் செலுத்தினால் தான் டெண்டரில் கலந்து கொள்ள முடியும். இதில் எப்படி ஊழல் செய்ய முடியும்.

இது சம்பந்தமாக திமுகவினர் நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து, சீலிட்ட அறிக்கையை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த சீலிட்ட அறிக்கையை படிக்காமலேயே மேலோட்டமாக பார்த்தால் தவறு நடந்ததற்கு முகாந்திரம் இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

சீலிட்ட அறிக்கையை பிரித்து படிக்காமலேயே எப்படி முடிவெடுக்கலாம் என்று நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றோம். உச்சநீதிமன்றத்தில் அந்த சீலிட்ட அறிக்கையை பிரித்து படித்து பார்த்து இந்த வழக்கு அரசியல் நோக்கத்திற்காக போடப்பட்டது என்று தள்ளிவைத்து விட்டார்கள். இதே நிறுவனத்திற்கு திமுக ஆட்சியில் 8 டெண்டர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இது தெரியாமல் வழக்கு போட்டுவிட்டு, தற்போது முழித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கொடுத்தது இ-டெண்டர். இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அமெரிக்காவிலிருந்தும் டெண்டர் போடலாம். ஸ்டாலின் கொண்டு வந்தது பெட்டியில் போடும் டெண்டர்.

இதில் யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வார்களோ, அவர்களுக்கு தான் ஷெட்யூல் கொடுப்பார்கள். இவர் சொல்லும் நிறுவனம் திமுக ஆட்சியில் 8 டெண்டர் போட்டு இருக்கிறார்கள்.

சிங்கிள் டெண்டர் கூட போட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதேபோல TNRSP பேஸ்-1 டெண்டரில் திமுகவினர் போட்டது 210 கோடி ரூபாய்க்கு, கொடுத்தது 500 கோடி ரூபாய். இது எல்லாம் வெட்டவெளிச்சத்திற்கு வரும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் போக வேண்டிய இடத்திற்கு போவார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமி பேசினார்.