சிறப்பு செய்திகள்

தரக்குறைவாக செயல்படும் ஸ்டாலினுக்கு கழகம் கண்டனம்

சென்னை

அம்மா அவர்களின் அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கும் மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் பக்குவமோ, பண்பாடோ இன்றி விமர்சித்து வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், அவரது கட்சியினருக்கும் கழக பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எதிர்பாராத மறைவை தங்களுக்கு கிடைத்த அரசியல் நல்வாய்ப்பாக மனதில் கருதி, ஆட்சி அமைக்கும் மன கோட்டையை கட்டி வந்தனர் தி.மு.க. தலைவரும், அவரது கட்சியினரும். கழக அரசின் செயல்பாடுகளால் கழகத்திற்கும், கழக அரசுக்கும் பெருகி வரும் மக்களின் போரதரவு தி.மு.க.வினருக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், விரக்தியையும் தந்திருப்பது அவர்களின் பேச்சிலும், செயலிலும் வௌிப்படையாக தெரிகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உறுதியான இரும்புக் கோட்டையாய் உயர்ந்து நிற்கிறது. மக்களுக்கு ஆற்றி வரும் மகத்தான தொண்டுகளால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மக்களின் மனதில் அன்பான இடத்தைப் பெற்றுள்ளனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியைப் போல சிறப்பான ஆட்சி என்று மக்கள் பாராட்டுவது நாடு, நகரமெங்கும், பட்டி தொட்டியெங்கும் நாள்தோறும் எதிரொலிக்கிறது. வரலாற்றுச் சாதனைகள் பல புரிந்திருப்பதால் மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர இருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக இருக்கிறது.

இவற்றை எல்லாம் தாங்கிக் கொள்ள இயலாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்சியினரும், தங்கள் பேராசை நிறைவேறாத ஆசையாக மாறிவிட்ட சோகத்தில் பண்பாடற்ற முறையிலும், ஜனநாயக நெறிகளுக்கு எதிராகவும் பொது வாழ்வுக்கான பக்குவம் இல்லாமலும் செயல்படுவது அனைவரையும் முகம் சுளிக்க செய்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியலை தரம் தாழச் செய்து தனிமனித தாக்குதல்களிலும், தரக்குறைவான முறைகளிலும் செயல்படும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும், அவரது கட்சியினரையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பதை மறந்து விடாமல் நெறிசார்ந்து செயல்பட தி.மு.க.வினரை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.