தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் உள்ளது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி முன்னிலை வகித்தார்.

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

முதலமைச்சர் ஆணைப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 791 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 683 நபர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 64 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையிலும், 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பிலும் என 101 நபர்கள் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 32420 ஆகும்.

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு தனி மருத்துவக்குழு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் செயல்படும் தற்காலிக மருத்துவ மனையில் இதுவரை 7735 பேர் கண்காணிப்பில் இருந்தனர். அதில் 5564 நபர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது செட்டிக்கரையில் 72 நபர்கள் மட்டுமே கண்காணிப்பில் உள்ளனர்.

தருமபுரி மாவட்டத்திற்கு இதுவரை வெளிநாடுகளில் இருந்து 975 நபர்களும், வெளி மாநிலங்களிலிருந்து 8067 நபர்களும், பிற மாவட்டங்களில் இருந்து 10753 நபர்களும் வந்துள்ளனர். தருமபுரி மாவட்ட எல்லைகளில் மொத்தம் 13 சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சோதனை சாவடிகள் வழியாக இதுவரை பிற மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் 8936 நபர்கள் ஆகும். சோதனை சாவடிகள் வழியாக பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 2379 நபர்கள். சோதனை சாவடிகள் வழியாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 66 நபர்கள் ஆகும்.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மேலும் 2069 படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது, இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 678 மற்றும் தீவிர கண்காணிப்பு படுக்கை வசதி 78 மேலும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் 52 உள்ளது. மாவட்டத்தில் மருத்துவர், செவிலியர். ஆய்வக நுட்புனர், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 2014 பேர் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரோனா பணிக்காக 66 வாகனங்கள் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது. அவசர காலப் பணிக்காக உடனடியாக சிகிச்சை வழங்க மாவட்ட அளவில், வட்டார அளவில், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் என மொத்தம் 66 குழுக்களும், ஊராட்சிகள் மற்றும் துணை சுகாதார நிலைய அளவில் 218 குழுக்களும் என 284 குழுக்கள் ஏற்படுத்ததப்பட்டு அதில் 1151 நபர்கள் இந்த அவசர கால பணிக்காக பணியமர்த்ப்பட்டு உள்ளனர். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும், கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இன்முகத்துடன் சிகிச்சை அளிக்கிறார்கள். தற்போது பருவ மழை பெய்து சாலைகள் தெருக்களில் மழை நீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே டெங்கு கொசு புழு உற்பத்தியாவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

பொது மக்கள் யாரும் அச்சப்படதேவையில்லை தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி கொரோனா தொற்று ஏற்படாதவாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனவும், சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமெனவும், அரசிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும், முதலமைச்சர் எண்ணேகோள் புதூர் திட்டத்திற்கு ரூ.72 கோடி ஒதுக்கிடு செய்துள்ளார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பம்பிங் செய்து தண்ணீர் எடுக்க ரூ.300 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஆயத் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓகேனக்கல் உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராமமூர்த்தி, சார் ஆட்சியர் மு.பிரதாப், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் என்.ஜி.சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்கத் தலைவர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பூ.இரா.ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி இருப்பிட மருத்துவர் மரு.இளங்கோவன், அரசுத்துறை அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.