தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் 118 அம்மா நகரும் விலைக்கடைகள் துவக்கம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 13,384 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், கருக்கம்பட்டி, தொட்டார்தனஅள்ளி மற்றும் காரிமங்கலம் பைசுஅள்ளியில் 2 பகுதி நேர நியாயவிலைக்கடை, ஒரு முழு நேர நியாயவிலைக்கடை ஆகியவற்றை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.கார்த்திகா தலைமை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன், பேசியதாவது;-

நியாயவிலைக்கடைகளுக்கு முன்பு தாய்மார்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக புதிய நியாய விலைக்கடைகளை அரசு தொடங்கி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2005ம் ஆண்டு நியாய விலைக்கடைகளை தொடங்குவதற்கான வரைமுறைகளை தளர்த்தி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் புதிய அரசாணையை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் வெளியிட்டார்.

இதனடிப்படையில் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் எவ்வித தங்குதடையுமின்றி பொருட்களை வாங்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. அம்மா அவர்கள் வழியில் செயல்படும் முதலமைச்சரால் சட்டமன்ற பேரவை விதி எண்.110 அறிவிப்பின்படி மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சென்று விநியோகிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவக்கிட அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் 13,384 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவங்கப்படுகிறது. காரிமங்கலம் வட்டம், பைசுஅள்ளி கிராமத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, மாட்லாம்பட்ழ நியாயவிலைக் கடையிலிருந்து 220 குடும்ப அட்டைகளை பிரித்து. புதியதாக பைசுஅள்ளி கிராமத்தில் நான்காவது பகுதிநேர நியாயவிலைக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்நியாயவிலைக் கடையானது வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் செயல்படும்.

பாலக்கோடு வட்டம், தொட்டார்த்தனஅள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் தொட்டார்த்தனஅள்ளி பகுதிநேர நியாயவிலைக்கடை 521 குடும்ப அட்டைகளுடன் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் (வெள்ளி மற்றும் சனி) செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைதாரர்கள் அதிக அளவில் உள்ளதாலும், அத்தியாவசியப் பொருட்களை பெற சிரமம் ஏற்பட்டு வந்ததாலும், தொட்டார்த்தனஅள்ளி பகுதிநேர நியாயவிலைக்கடை 451-வது முழுநேர நியாயவிலைக் கடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி இந்நியாயவிலைக் கடை வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்.

அதேபோன்று சாமன்கொல்லை கிராமத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, பிக்கனஅள்ளி நியாயவிலைக் கடையிலிருந்து 109 குடும்ப அட்டைகளை பிரித்து, புதியதாக சாமன்கொல்லை கிராமத்தில் இரண்டாவது பகுதிநேர நியாயவிலைக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்நியாயவிலைக் கடையானது வாரத்தில் செவ்வாய்கிழமை ஒருநாள் மட்டும் செயல்படும். இதுபோன்று தமிழக அரசு கடைகோடி மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆ.தணிகாசலம், வட்டாட்சியர்கள் கலைச்செல்வி, ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மணிவண்ணன், தண்டபாணி, ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கவிதா சரவணன், காவேரி, பாலக்கோடு கூட்டுறவு சக்கரை ஆலை இயக்குநர்கள் கோபால், ரவிசங்கர், சார்பதிவாளர்கள் அன்பரசு, பெரியண்ணன், கௌதம், காரிமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெயபிரகாஷ், செல்வக்குமார், செந்தில்குமார், சந்திரன், சுப்பிரமணியன், சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.