காஞ்சிபுரம்

தற்காலிக துணை செவிலியர்கள் 70 பேர் பணி நீக்கம்-அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தில் முன் அறிவிப்பின்றி அரசின் தவறான நடவடிக்கையால் தற்காலிக துணை செவிலியர்கள் 70 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை தாக்கத்தின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக துணை செவிலியர்களாக 70-க்கும் மேற்பட்டோரை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பணியில் அமர்த்தியது.

இவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் 70 பேரும் பணியில் இருந்து முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த 70 பேரும், தமிழக அரசையும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியல் போராட்டம் நடத்த திரண்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்ததும் காவல்துறை ஆய்வாளர் சுந்தர்ராஜ் விரைந்து வந்து பணி நீக்கப்பட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

பணி நீக்கம் செய்யப்பட்டதால் பாதிப்படைந்தவர்கள் கூறியதாவது:-

எங்களை பணியில் அமர்த்தும் போது தற்காலிக பணியாளர்களாக மட்டுமே கூறினர். நாங்களும் பணியில் சேர்ந்தோம், ஆனால் இரண்டு மாதத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எங்களை வேலையை விட்டு நீக்கியது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

2 மாதம் தான் பணி என்றால் நாங்கள் அப்போது இப்பணியில் சேர்ந்து இருக்க மாட்டோம். தனியார் மருத்துவமனையில் 20,000 ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த நாங்கள் தற்போது அரசு மருத்துமனையில் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தோம்.

இதுவரை ஒரு மாத சம்பளம் கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை.தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முன் களப்பணியாளர்களான எங்களுக்கு 25 ஆயிரம் நிவாரண தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் நிர்வாகம் சார்பில் திடீரென எங்களை வேலையில் இருந்து நீக்கியது எங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா காலத்தில் நிரந்தர செவிலியர்கள் மரண பயத்தால் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தபோது எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்து எங்கள் குடும்பங்களை விட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இப்பணியை செய்தோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் திடீரென எங்களை பணியிலிருந்து நீக்கியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறினர்.