சிறப்பு செய்திகள்

தலைமை கழகத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்-துணை முதலமைச்சர் கேக் வெட்டினார்

சென்னை

தலைமை கழகத்தில் நேற்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கழக மகளிர் அணியின் சார்பில் தலைமை கழகத்தில் நேற்று காலை மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை தலைமை கழக வளாகத்தில் பெருந்திரளாக திரண்டிருந்த கழக மகளிர் பூச்செண்டுக்ள வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மகளிர் அணியினர் அளித்த வரவேற்பை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கழக மகளிர் அணியின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி., கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்பு செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச மகளிர் தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கழக மகளிர் அணி செயலாளரும், கழக மாநிலங்களவை குழு கொறடாவுமான விஜிலா சத்தியானந்த், கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வி.சரோஜா ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக மகளிர் அணியினரும், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தலைமை கழக வளாகம் அமைந்துள்ள பகுதியில் சாலையின் இரு மருங்கிலும் கழக கொடித் தோரணங்கள் அழகுற அமைக்கப்பட்டு செண்டை மேளம் முழங்க துணை முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்வாறு தலைமை கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.