தற்போதைய செய்திகள்

தலைமை பண்புக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் – எம்.ஏ.முனியசாமி கடும் தாக்கு

ராமநாதபுரம்

தலைமை பண்புக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் என ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்து பேசியதாவது:-

கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தலின் படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இளைஞர்களை அதிகளவில் கழகத்தில் இணைத்து வருகிறோம். பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைக்க வேண்டும். நமது இலக்கு 2021-ல் மீண்டும் கழக ஆட்சி நடைபெற வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் கழகம் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

மீண்டும் கழக ஆட்சி நடைபெற்றால் மட்டுமே தமிழகம் அமைதி பூங்காவாக திகழும்.தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அக்கட்சியில் தலைமை பண்பு வகிக்க தகுதி இல்லாதவர். கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு நமது ஒருங்கிணைப்பாளர்கள் அதிகளவில் பதவிகள் வழங்கி வருகின்றனர். கழக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் அனைவரையும் டெபாசிட் இழக்கும் படி நமது கழக பணி 2021-ல் இருக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு கழகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, திருவாடானை ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன், செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.