தற்போதைய செய்திகள்

திண்டிவனம் வளர்ச்சிப் பணிகள் – மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும், வட–கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்கும் வகையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி நகராட்சி முழுவதும் உள்ள சாலையோர கால்வாய்கள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளை நீர் தேங்கவிடாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள திண்டிவனம் நகராட்சி ஆணையருக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினார்.

மேலும் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் எஸ்.அனு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், நகராட்சி ஆணையர் வசந்தி, நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் சேர்மன் வெங்கடேசன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப், அர்பன் வங்கி தலைவர் சேகர், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.