தற்போதைய செய்திகள்

திமுக தேய்பிறை, அதிமுக வளர்பிறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

திமுக தேய்பிறை, அதிமுக வளர்பிறை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் இருக்கக்கூடிய அவரது சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க தான்.கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவை நடத்தக்கூடாது என்று கூறியது திமுக தான்.ஆனால் தற்போது மாற்றி பேசி வருகிறார்கள். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் அதிமுகவிற்கு கூட்டணிக்கு வர சாத்திய கூறுகள் உள்ளது. ஆனால் எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை.திமுக தேய்பிறை போல் தேய்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் அதிமுக வளர்பிறை போல் வளர்ந்து வருகிறது.

கிசான் முறைகேடு தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். தற்போது உள்ள கொரோனா தாக்கம் குறித்தும்,அதன் செலவீனங்கள் குறித்தும் தெளிவாக பேரவையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பா.ஜ.க.வில் மாநில தலைவர் முருகன் கூறுவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். நேற்று ஒரு கட்சியில் இருந்துவிட்டு இன்று ஒரு கட்சிக்கு வந்தவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பேரவையில் பாரபட்சம் இல்லாமல் அனைவரும் பேசியதை வெளியிடப்பட்டிருக்கிறது. முதல்வர் பேசியதை மட்டுமே வெளியிட்டோம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.