தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.24.35 கோடி மதிப்பீட்டில் மண்டல புற்றுநோய் மையம்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 31 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ நேரியல் முடுக்கி கருவி நிறுவுவதற்காக 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவுக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் 26 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கருவிகளின் சேவையை துவக்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகளை நிறுவுதல், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க 2000 அம்மா மினி கிளினிக்குகள் ஏற்படுத்துதல், மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசால் 2013-14-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30 கோடி ரூபாய் செலவில் மண்டல புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த மையத்தில், 4 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு, புற்றுநோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 17 கோடியே 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ நேரியல் முடுக்கி கருவி நிறுவப்பட்டுள்ளது. மேலும், இம்மையத்தில் HDR Brachytherapy,, சி.டி. ஸ்டிமுலேடர் ஆகிய கருவிகள் 3 கோடியே 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளன. தென் தமிழகத்தில் முதன் முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூடிய உலகத் தரம் வாய்ந்த அதிநவீன கருவியான லினியர் ஆக்ஸிலேட்டர் நிறுவப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் மூளையில் சிறிய அளவில் பரவிய புற்றுநோய், தோல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் அனைத்து புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும்.
மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 3 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள “சி” மற்றும் “டி” பிரிவு பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் 1 கோடியே 88 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மையம்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் சார்பில், விழுப்புரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் மற்றும் மகப்பேறு தாதியம் பயிற்சிப் பள்ளிக் கட்டடம், சென்னை, எழும்பூரில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் மற்றும் மகப்பேறு தாதியம் பயிற்சிப் பள்ளி கட்டடம்; விழுப்புரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 1 கோடியே 23 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்,

கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரை, சோமையம்பாளைம் மற்றும் வடசித்தூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்கலூர், ஈரோடு மாவட்டம் கடம்பூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தானூர், திண்டுக்கல் மாவட்டம் ரெங்கநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம், விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம், தேனி மாவட்டம் பூதிப்புரம் மற்றும் திருவாரூர் மாவட்டம் வேலங்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 6 கோடியே 90 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்,

கோயம்புத்தூர் மாவட்டம் நரசிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் குருமஞ்சேரி, திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி மற்றும் புதுமடம், திருவாரூர் மாவட்டம் சங்கந்தி-எடையூர், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடங்கள்,


தஞ்சாவூர் மாவட்டம் கும்பேஸ்வரம் தெற்கு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்என மொத்தம் 31 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் கடந்த 17.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “புற்றுநோய் சிகிக்சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நடப்பாண்டில் ஒரு லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவவனையில் லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி நிறுவிட, 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவு கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நேரியல் முடுக்கி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கேத் லேப் மற்றும் சி.டி. ஸ்கேன் கருவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்3 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கேத் லேப் கருவி, ஆகிய மருத்துவக் கருவிகளின் சேவையை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.