தற்போதைய செய்திகள்

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து விட்டார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து நேற்று பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து விட்டார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆணையின் படி திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு படுகை பாசனத்தில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வட்டத்தில் 12,645 ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் 6,150 ஏக்கரும், தாராபுரம் வட்டத்தில் 19,658 ஏக்கரும், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கரும், திருப்பூர் வட்டத்தில் 7,266 ஏக்கரும் மற்றும் காங்கேயம் வட்டத்தில் 7,676 ஏக்கர் என 70,860 ஏக்கரும் மற்றும் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தில் 20,351 ஏக்கரும், மற்றும் சூலூர் வட்டத்தில் 2,990 எக்கர் என 23,341 ஏக்கரும் ஆக திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களைச் சார்ந்த 94,201 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும், நேற்று முதல் நான்கரை சுற்றுகளாக மொத்தம் 8700 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் 250 கன அடி, வினாடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி, வினாடி அளவிற்கு அதிகரித்து வழங்கப்படும்.

மேலும், தளிவாய்க்கால் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பில் உள்ள தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், நேரடிபாசனம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய பகுதிக்குட்பட்ட சுமார் 2786 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை வேளாண் பெருங்குடி பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கால்நடை பராமரிப்புத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் புரட்சிகரமான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயலாற்றி வருகிறார்.

குறிப்பாக, ஆசியா கண்டத்திலேயே இல்லாத வகையில் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கோயமுத்தூர், திருப்பூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணைக்கிணறு பகுதியில் ரூ.94.72 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்து அதற்கான நிதியினை ஒதுக்கி தந்துள்ள முதலமைச்சருக்கு திருப்பூர் மாவட்ட மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் உ.தனியரசு (காங்கேயம்), கந்தசாமி (சூலூர்) மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, திருமூர்த்தி அணை கோட்ட செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் க.காஞ்சித்துரை, உதவி பொறியாளர்கள் சண்முகம், செந்தில்குமார், ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி.வி.வாசுதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எஸ்.பி.ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் செளவுந்தர்ராஜ் அமராவதி கிட்டு கொழுமம் தாமோதரன், உதயகுமார், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.