தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 38,000 விவசாயிகளுக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் வழங்க திட்டம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 38,000 விவசாயிகளுக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றானாது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய, மாநில அரசால் ஊரடங்கானது கடந்த மார்ச்-24ம்தேதி முதல் பிறப்பிக்கப்பட்டு தற்பொழுது 70 நாட்களையும் கடந்து ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தொற்று எண்ணிக்கை என்பது கிராமப்புற உள்ளடக்கிய மாவட்டங்களில் கட்டுக்குள் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 32 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பபட்டனர்.

அதற்கு பிறகு, பிற மாநில, பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களையும் சேர்ந்து மொத்தம் 55 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தற்பொழுது 13 நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக தொற்று இல்லை. முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கையால் கொரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. தமிழகத்தில் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் 2 லட்சத்து 93 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்றவைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அதேபோன்று கிருமி நாசினி தெளிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளாட்சி துறை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லாதவாறு பார்த்து கொண்டு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

இதுவரை, இந்த ஆண்டு நெல் கொள்முதலை பொறுத்தவரையில் 23 லட்சத்து 724 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 102 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. டெல்டா, டெல்டா அல்லாத மாவட்டங்களில் 485 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி தொடங்க இருப்பதால் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் விவசாய கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 38,000 விவசாயிகளுக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிமராமத்து திட்டம், சிறப்பு தூர்வாரும் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு மூலம் சி.டி வாய்க்கால்கள் 2359 கி.மீ தூரம் தூர்வார திட்டமிடப்பட்டு இதுவரை 77,311 மனித சக்திகள் மூலம் 623 கி.மீ தூரம் தூர்வாரப்பட்டுள்ளது.

மேலும் 317 குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 106 பணிகளில் 1242 கி.மீ தூரம் தூர்வார திட்டமிடப்பட்டு இதுவரை 597 கி.மீ தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. இப்பணிகள் 297 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் விரைவாக நடைபெற்று வருகிறது. மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிற அரசாக அம்மா அவர்களின் அரசு திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் எம்.துரை கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமூர்த்தி, துணை இயக்குநர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.