சிறப்பு செய்திகள்

தி.மு.கவை ஓட ஓட விரட்டி அடியுங்கள்-முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

அம்மா அரசு தொடர இரட்டை இலைக்கு வாக்களிப்பதோடு மட்டுமல்லாமல் தி.மு.க.வை ஓட ஓட விரட்டி அடியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி ேக.பழனிசாமி 22.3.2021 அன்று சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

இன்றைக்கு தமிழகம் வெற்றி நடைபோடும் தமிழகமாக விளங்கி வருகிறது. அதை கேட்டாலே ஸ்டாலின் அலறுகிறார். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.

அவர்கள் அறிவித்த திட்டங்களை இந்திய நாடே வியந்து பார்த்தது. அதே வழியில் நடைபெறும் அம்மாவின் அரசும் ஏழை, எளிய மக்களுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. உங்களைப்போல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த தேர்தலிலே தி.மு.கவிற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். இந்த ஓமலூர் சட்டமன்ற தொகுதி, அம்மா அவர்களுக்கு எப்போதும் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த தொகுதி. இந்த தொகுதி அம்மாவின் கோட்டை.

ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளது. விவசாயம் சிறந்து விளங்குகிறது. குடிநீர் பிரச்சினை கிடையாது. அம்மா அவர்கள் 2011 தேர்தல் அறிக்கையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுப்போம் என அறிவித்தார். அதனை முழுமையாக செயல்படுத்தினார்.

ஆனால் திமுக 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் யாருக்கும் நிலம் வழங்கவில்லை. நிலத்தை வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மக்களுடைய நிலத்தை அவர்கள் அபகரிக்காமல் இருந்தாலே போதும்.

எங்கேயாவது விலை மதிப்புமிக்க நிலம் இருந்தால் போதும், அது உடனடியாக திமுகவினரால் அபகரிக்கப்பட்டது. அதனால் தான் அம்மா அவர்கள் திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களிடம் சேர்த்தார்.

தி.மு.க ஆட்சி வந்தால் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து போய்விடும். கழக ஆட்சியில், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

நீர் மேலாண்மையில் விருது, மின்சாரத்துறையில் விருது, போக்குவரத்துத்துறையில் விருது, உள்ளாட்சித் துறையில் விருது, சுகாதாரத்துறையில் விருது என பல்வேறு துறைகளில் விருதுகளை பெற்றுள்ளோம். சேலத்தில் ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வரவுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளோம். ஜவுளி பூங்கா அமைக்கவுள்ளோம்.

ஸ்டாலின் போகும் இடங்களிலும் திண்ணையில் பெட்ஷீட் விரித்து போட்டு, அமர்ந்து கொண்டு பெட்டியை வைத்து பொதுமக்களிடம் குறை கேட்கிறாராம். மனுக்களை பெட்டியில் போட்டவுடன் பூட்டி, சீல் வைத்து அவர் எடுத்துச் சென்று விடுவாராம்.

அவர் முதலமைச்சர் ஆனதும் 100 நாட்களில் பெட்டியை திறந்து குறைகளை தீர்ப்பாராம். எவ்வளவு கதை அளக்கிறார் பாருங்கள். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இது நவீன காலம். ஸ்டாலின் முதலமைச்சரானால் தானே அந்த பெட்டியை திறக்க முடியும். நீங்கள் முதலமைச்சர் ஆகப்போவதும் இல்லை, பெட்டியை திறக்கப் போவதும் இல்லை.

கருணாநிதி எவ்வாறு முதலமைச்சராக ஆனார், அண்ணா மறைவுக்குப் பின்னர் முதலமைச்சர் ஆனார். அதேபோல, அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். அதனால் முதலமைச்சர் ஆனேன். வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தி.மு.கவை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். மீண்டும் கோட்டையில் வெற்றிக் கொடியை ஏற்ற வேண்டும்.

இது உங்கள் அரசு, மக்களின் அரசு. ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வரும் அம்மாவின் அரசு மீண்டும் தொடர, ஓமலூர் சட்டமன்ற தொகுதியிலே கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற கழக வெற்றி வேட்பாளார் ஆர்.மணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.