தற்போதைய செய்திகள்

தி.மு.க. அரசு நாணயம் தவறி விட்டது

கழக இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் குற்றச்சாட்டு

மதுரை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு நாணயம் தவறி விட்டது என்று கழக இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கழக இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் மதுரையில் உள்ள தனது இல்லம் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில் கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்தி ராஜா, மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மக்களின் உரிமை குரலாக முழக்கம் எழுப்பினர்.

இதன் பின்னர் இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. குறிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் இந்த நீட் தேர்வு 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வுகாக வாதாடியவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம். இப்படி தி.மு.க.வும், காங்கிரசும் நீட் தேர்வுக்கு ஆதரவு கொடுத்ததை மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

புரட்சித்தலைவி அம்மா நீட் தேர்வை ரத்து செய்ய கடுமையாக போராடினார். அதனைத் தொடர்ந்து அம்மா அரசை தலைமை தாங்கி வந்த எடப்பாடியாரும் கடுமையாக போராடியதோடு மட்டுமல்லாமல் 2017-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு ரத்துக்கு என்று சொன்னார்.

அது மட்டுமல்லாது நீட் தேர்வை ரத்து செய்யும் வழி எங்களுக்கு தெரியும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி மாணவர்களின் நம்பிக்கையை இழந்து அரசாக இந்த அரசு உள்ளது. ஆகவே நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் அரசுருக்கு இப்போராட்டம் வாயிலாக வலியுறுத்துகிறோம்.

மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்கள் ஆனால் எதையும் வழங்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது,

சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நாணயம் தவறிய அரசாங்கமாக திமுக அரசு உள்ளது. மக்களுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் நிச்சயம் அரசுடன் போராடி இந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் எடப்பாடியாரும்,. ஓ.பன்னீர்செல்வமும் நிச்சயம் பெற்றுத் தருவார்கள்.

இவ்வாறு இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் கூறினார்.