தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சி மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி – முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு

புதுக்கோட்டை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தி.மு.க. ஆட்சி மீது கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை சாந்தனாதபுரத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி மீது கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 50 சதவீதத்தை நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்.

இது மக்கள் மன்றத்தில் எடுபடாது. வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதற்கு உதாரணம் சாமானிய மக்கள் மீது சொத்துவரியை உயர்த்தியதே ஆகும்.

விடியா தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தி இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வீட்டு வாடகை உயரும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சொத்து வரி உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

கழக ஆட்சியின் போது ஏழை மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 8 மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியில் எனது குடும்பத்திற்கும் எனக்கும் எவ்வளவோ தொந்தரவு கொடுத்தாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு கழகத்திற்காக போராடுவேன். இனிவரும் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.