தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா?

கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி
ராமநாதபுரம்
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா? என்று கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பரமக்குடியில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பிரகாசம் தலைமை வகித்தார். காரைக்குடி போக்குவரத்து மண்டல செயலாளர் போஸ் வரவேற்றார்.
கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ், அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சங்கரலிங்கம், தலைமை கழக பேச்சாளர்கள் சின்னத்தம்பி, சம்ஸ்கனி, மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் பேசியதாவது:-
ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகை உள்ளது. ஆனால் சாதி, மதங்கள் கடந்து சமத்துவமாய், சகோதரத்துவமாய் உழைப்பாளிகள் அனைவரும் கொண்டாடும் ஒரே பண்டிகை தான் மே தின விழா.
உழைப்பவரே நாட்டில் உயர்ந்தவர்கள். ஆண்டு தோறும் மே தின விழாவை மே முதல் நாளில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கழகம் கொண்டாடி வருகிறது.
கழகத்தில் மட்டும் தான் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். இன்று தொண்டர்களாக கீழே அமர்ந்து இருப்பவர்கள் நாளை தலைவர்களாக வலம் வரும் பாக்கியம் உள்ளது. அந்த வாய்ப்பை கழகத்தால் மட்டும் தான் தர முடியும். தந்தைக்கு பிறகு மகன், மகனுக்கு பிறகு பேரன் என குடும்ப அரசியலை செய்ய இது ஒன்றும் தி.மு.க. கிடையாது.
மத்திய அரசுடன் நாம் கூட்டணி வைத்தது அரசியல் உறவு தானே தவிர அது கொள்கைக்கான உறவு கிடையாது. கொள்கை வேறு கூட்டணி வேறு. சிறுபான்மையின மக்களை காரணம் காட்டி தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது.
ஆனால் கழகத்திற்கு சாதிகள் கிடையாது, மதங்கள் கிடையாது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு சாதி தெரியாது, மதங்கள் தெரியாது. அதே போல புரட்சித்தலைவி அம்மாவுக்கும் சாதி, மதம் பார்க்க தெரியாது.
இஸ்லாமியர்களுக்கும், கழகத்திற்கும் ரத்த சொந்தம் உள்ளதை எவராலும் தடுக்க முடியாது. சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியை மட்டும் வைத்து தி.மு.க. ஏமாற்றி பிழைக்கிறது. இன்று கழகத்தில் தொண்டர்களாக இருக்கும் அனைவரும் நாளை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஏன் முதலமைச்சராக கூட வரலாம். ஆனால் தி.மு.க.வில் ஆ.ராசாவையும், பொன்முடியையும் முதல்வர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவிக்க தயாரா?
ஒரு மரத்தின் பூ வெளியே தெரியும், காய் வெளியில் தெரியும், கிளை வெளியில் தெரியும். ஆனால் வேர் வெளியே தெரியாது. அது போல தான் கழகத்தின் தொண்டர்கள். இந்த தொண்டர்கள் தான் கழகத்தின் வேர்கள்.
கழக நிர்வாகிகள் அனைவரும் தொண்டர்களை வழிநடத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் போதும் ஆட்சியை அண்ணா திமுகவிடம் ஒப்படைக்கிற காரியத்தை தி.மு.க.வினர் செவ்வனே செய்து முடிப்பார்கள்.
இரவெல்லாம் மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் விடியும் வரை காத்திருப்பதற்கு பெயர் விடியல் ஆட்சியா? பெண்கள்தான் மகா சக்திகள். அதனால் தான் அம்மனை சக்தி என்கிறோம்.
பெண்கள் நினைத்தால் எதையும் எதிர்க்க முடியும். தி.மு.க. ஆட்சியை கூட கலைக்க முடியும். எங்களை ஸ்டாலின் அடிமைகள் என்று கூறுகிறார். மத்திய அரசை எதிர்த்து எந்தவித பதிலும் பேசாமல் இருக்கும் நீங்கள் என்ன கொத்தடிமைகளா?
ஓட்டு போட்ட மக்கள் தங்கள் விரல்களை கடித்து துப்புகிற அளவுக்கு சொத்துவரி உயர்வு, பால் பொருட்கள் விலையேற்றம், பேருந்து, மின் கட்டண உயர்வுகள் என கஷ்டத்தை கொடுக்கிறது தி.மு.க. ஆட்சி. அன்றைக்கு சட்டமன்றத்தில் இருந்து தன் சட்டையை கிழித்துக் கொண்டு ஆளுநர் வீட்டு கதவை தட்டியது யார்? எதிர்க்கட்சியாக இருக்கிற போது இனிக்கிற கவர்னர் ஆளும் கட்சியாகி விட்டால் கசக்கிறாரா?
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றிய மாடல் பிராடு மாடலே தவிர அது திராவிட மாடல் ஆகாது. விடியல் தருகிறேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு மக்களின் கையில் மின்விசிறியை தந்தவர் தான் இந்த ஸ்டாலின். தந்தையை போல் தான் மகன் என்பதற்கு உதாரணம் கருணாநிதி மகன் ஸ்டாலின் தான்.
வேலுநாச்சியாரின் படை தளபதியாக இருந்து நாட்டை காத்தவர்கள் இரு சகோதரர்கள். விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் என்ற இரண்டு சகோதரர்கள். கொங்கு கோட்டையில் குல தெய்வமாக பாதுகாத்தவர்கள் பொன்னர்-சங்கர் என்ற வல்லமை பெற்ற இரு சகோதரர்கள். அதேபோல்தான் கழகத்தை வழிநடத்தி கொண்டிருப்பவர்களும் இரண்டு சகோதரர்கள். நமது இயக்கத்திற்கு இரண்டு இலைகள் இருக்கிறது. எங்கள் கழகத்தை வழி நடத்த இரண்டு தலைகளும் இருக்கிறது. நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் 2026-ல் கழகம் நிச்சயம் ஆட்சியில் அமரும்.
இவ்வாறு கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக, நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.