தற்போதைய செய்திகள்

தி.மு.க.வால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை,

தி.மு.க.வால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை திருமங்கலம் தொகுதி டி.குண்ணத்தூரில் உள்ள அம்மா கோயிலில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கெட்களை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆர்.போஸ், பி.மீனாள், யு.பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலை தீர்ப்பதே தனது முதல் கடமையாக எண்ணி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அம்மா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 31.3.2016 வரை நிலுவையில் உள்ள ரூ.5,318 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார்.

இதன் மூலம் 12 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயனடைந்தனர். இதன் பின்னர் 2017-ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டது. அதன் காரணமாக விவசாய பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக முதலமைச்சர் வழங்கினார். தற்போது வேளாண் பெருமக்களுக்கு அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சர் இடுபொருள் நிவாரணமாக 1,717 கோடி ரூபாயை வழங்கினார்.

கடந்த 5-ந்தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத்தொகையான ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த வேளாண் பெருங்குடி மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இதை கூட ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அம்மா அரசு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது நாங்கள் வெற்றி பெற்றவுடன் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தேரதல் முடிந்ததும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஸ்டாலின் மறந்து விட்டார். இது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலின் போது திமுக இதைத்தான் கடைப்பிடிப்பார்கள்.

ஆனால் அம்மா அரசு அப்படியல்ல. சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நலனை எண்ணிப் பார்க்க மாட்டார்கள். தங்கள் வீட்டை எண்ணி பார்த்து தான் திட்டங்களை வகுப்பார்கள். அம்மா அரசின் சாதனை திட்டங்களை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் நாள்தோறும் பொய் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுகிறார்.

அதுமட்டுமல்லாது நான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வேன், அதை செய்வேன் என்று அள்ளி விடுகிறார். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அதேபோல் தி.மு.க.வால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது. ஸ்டாலின் பேச்சு ஒருபோதும் நாட்டு மக்களுக்கு உதவாது.

எடப்பாடியாரே மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் உறுதியுடன் உள்ளனர். நிச்சயம் மக்கள் எண்ணம் ஈடேறும். ஏனென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.