தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினருக்கு பயந்து பெண் தற்கொலை முயற்சி- தள்ளுவண்டியை உடைத்து கொலை மிரட்டல்

செங்கல்பட்டு

தாம்பரம் அருகே சூப் விற்கும் தள்ளுவண்டியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வினருக்கு பயந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை ஆண்டுகளாக வீட்டின் அருகே தள்ளுவண்டி மூலம் சூப் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் தள்ளுவண்டி நிறுத்தப்பட்டிருந்த பகுதியை அபகரிக்க அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினரான செல்வம், சிலம்பரசன், அன்பு ஆகியோர் முயன்றனர். அவர்கள் ராஹீமுன்னிசாவை அந்த இடத்திலிருந்து காலி செய்யுமாறு மிரட்டி உள்ளனர்.

அதற்கு ராஹீமுன்னிசா மறுத்துள்ளார். இந்நிலையில் செல்வம், ராஜா ஆகியோர் திடீரென தள்ளுவண்டியை உடைத்து தி.மு.க.வின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் ஆட்டோ ஸ்டாண்டு போர்டை அந்த இடத்தில் வைத்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஹீமுன்னிசாவிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த ராஹீமுன்னிசா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இதுகுறித்து ராஹீமுன்னிசாவின் சகோதரி ஷபானா, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கணவரால் கைவிடப்பட்டவள். எனது தந்தை மிகவும் வயதானவர். எனது அக்காவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நீண்ட நாட்களாக இப்பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சம்பவத்தன்று எங்களது தள்ளுவண்டியை தி.மு.க.வினர் உடைத்ததோடு எங்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.