தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் அடக்குமுறையை எதிர்த்து போராடி கழக அரசை உருவாக்கும் காலம் வரும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை

ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல. எதிர்க்கட்சி என்பது எங்களுக்கு புதிதல்ல. தி.மு.க.வின் அடக்குமுறையை எதிர்த்து போராடி நிச்சயம் கழக அரசை உருவாக்கும் காலம் வரும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு சார்பில் அம்மா கோவிலில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பு படிக்க 7.5 இடஒதுக்கீட்டினை எடப்பாடியார் கொண்டு வந்தார்.

இன்றைக்கு 435 ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பு படிக்கின்றனர்.அதிமுக ஆட்சிக்காலத்தில் முதியோர் உதவித்தொகை 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இதற்காக 4,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் நடைபெற்ற திமுக ஆட்சியில் 12 லட்சம் பேருக்கு தான் வழங்கப்பட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1200 கோடி ஆகும்.

அதேபோல் இப்பகுதியில் 58 கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து மூன்று முறை சோதனை செய்யப்பட்டது கடந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று கழக அரசு செய்த திட்டங்களை எங்களால் மக்களுக்கு சொல்ல முடியவில்லை. அந்தளவுக்கு திட்டங்கள் ஏராளம். ஆனால் நம்பும் வகையில் பொய்களை சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றி இருக்கிறது திமுக.

இன்றைக்கு திமுக அடக்குமுறையை ஏவி விட்டு தங்களின் இயலாமையை மறைக்க பார்க்கிறது. ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல.

எதிர்க்கட்சி என்பது எங்களுக்கு புதிதல்ல. தி.மு.க.வின் அடக்குமுறையை எதிர்த்து போராடி நிச்சயம் கழகத்தின் புனித அரசை உருவாக்கும் காலம் வரும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.