தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் போலி முகத்திரையை கிழித்தெறிய தமிழக மக்கள் ஆயத்தம்-கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பேச்சு

சென்னை

பொய் சொல்லி ஏமாற்றி வெற்றி பெற்ற தி.மு.க.வின் போலி முகத்திரையை கிழித்தெறிய மக்கள் தயாராகி விட்டனர் என்று கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார்.

சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சி கழகம் சார்பில் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மேடவாக்கத்தில் ஒன்றிய கழக செயலாளரும், கழக அம்மா பேரவை துணை செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது, கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் தாக்கப்பட்டனர். வத்தலகுண்டு ஆறுமுகம் உள்பட எண்ணற்ற கழகத்தினர் உயிர் துறந்தனர்.

இப்படி எண்ணற்ற சோதனைகளை சந்தித்து, நெருப்பாற்றில் நீந்தி வெற்றி வாகை சூடியது நமது இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இதயதெய்வம் அம்மா அவர்கள் இந்தியாவிலேயே மிகப்பெரிய இயக்கமாக கழகத்தை உருவாக்கினார்.

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலம் ஆட்சிபுரிந்த இயக்கம் என்ற பெருமையை கழகம் பெற்றுள்ளது. தற்போது சிறிய அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளோம். அதனால் நாம் நம்பிக்கையை இழந்துவிடாமல் ஒன்றுபட்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும்.

தொடர்ந்து பல்வேறு பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர்களின் முகத்திரை கூடிய விரைவில் வெளிப்படும். அதற்கு தக்க பதிலடி கொடுக்க பொதுமக்கள் தயாராகி விட்டனர். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேடவாக்கம் ஊராட்சி கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்.

இவ்வாறு கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசினார்.

கூட்டத்தில் கழக நிர்வாகிகள் எம்.ஜி.திருவேங்கடம், இ.மணி, எம்.திருநீலகண்டன், வெ.பரணிபிரசாத், அரசங்கழனி கண்ணன், எம்.ஜி.சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மேடவாக்கம் எம்.பி.கண்ணபிரான் செய்திருந்தார்.