தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று எங்கள் உறுப்பினர் கேட்பதில் என்ன தவறு

பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி
சென்னை
முதலமைச்சர் என்பவர் பொதுவானவர், எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று எங்கள் உறுப்பினர் கேட்பதில் என்ன தவறு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பி பேசினார்.
தமிழக சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்து கழக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
அவர் பேசும்போது அ.தி.மு.க. ஆட்சி காலம் தான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் ஆகும். மறைந்த முதல்வர் அம்மா, ஆன்மிக நம்பிக்கை கொண்டிருந்ததால், இந்த துறையில் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தார் என்றும் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 11 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
கோவில் திருப்பணிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டதை, ரூ.50 ஆயிரமாகவும், ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கியது அ.தி.மு.க. ஆட்சியில்தான். இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவை முன்னவர் துரைமுருகன் குறுக்கிட்டுபேசினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சியின் உறுப்பினர் கருத்தை பதிவு செய்ய அவருக்கு உரிமை உள்ளது. கோவில் திருப்பணிகளுக்கு வழங்கும் தொகை தற்போது ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சொல்கிறீர்கள்.
இன்றைக்கு ஒரு டன் கம்பி ஒரு வருடத்திற்கு முன்பு 40 ஆயிரமாக இருந்தது இப்போது 92 ஆயிரமாக உள்ளது. அதுபோல சிமெண்ட் ஒரு வருடத்திற்கு முன்பு 290 ஆக இருந்தது இப்போது
490 ரூபாய். கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இன்றைக்கு கட்டுமான தொழில் செய்கின்ற நிலை இன்றைக்கு கேள்வி குறியாக இருக்கின்றது,
கடந்த காலத்திலே இதனை தொழிற்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆகவே இன்றைக்கு எல்லா பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டிருந்தாலும், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.1
லட்சத்துக்கு தான் அது சமம். என்று பேசினார். தொடர்ந்து பேசிய கழக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து மதத்தையும்
சமமாக பார்க்க வேண்டும். முதல்-அமைச்சர், கடவுள் இல்லை என்று மறுப்பவரா? என்றார். இதற்கு பேரவை தலைவர் அது ஒவ்வொருவரின் சொந்த விருப்பம் என்றார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார். தொடர்ந்து முதல்வர் பேசினார். பின்னர் எதிர்கட்சி தலைவர் பேசிய ஒரு கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி
கே.பழனிசாமி மக்களுடைய பிரச்சினையை நாங்கள் மரபுக்கு எதிராக பேசவில்லை. மக்களுடைய பிரச்சிசனையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை. எங்கள் உறுப்பினர் பேசியதில் என்ன தவறு
உள்ளது. முதலமைச்சர் என்பவர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர். எனவே அந்த அடிப்படையிலே அனைத்து மதத்திற்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்றுதான் எங்கள் உறுப்பினர் கேட்டார். இதில் என்ன தவறு.
பேரவை தலைவர் அது அவர்களின் கொள்கை முடிவு வேண்டாம் என்று சொல்விட்டார். என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் பேசினார்.பின்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விவாதம் எதையோ நோக்கி போய் கொண்டிருக்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கெல்லாம் நல்ல வாக்கை கொடுத்திருக்கிறார். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற நிலையை அனைவரும் எண்ணி பார்த்து ஒரே பாதையில் செல்ல வேண்டும் சொன்னார். எம்மதமும் சம்மதம் என்ற நிலையை நாம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.