தற்போதைய செய்திகள்

துன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

மக்களுக்கு துன்பங்கள் வருகின்றபோது அவர்களுக்கு பக்கபலமாக இருந்து மீட்டெடுத்த ஒரே அரசு அம்மாவின் அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: அரசு ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்திருக்கிறது, நீங்கள் தனிப்பட்ட முறையில் இது எங்களுடைய அரசின் பெரிய சாதனை என்று சொல்லக்கூடிய…

பதில்: நிச்சயமாக ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, எந்த பின்புலமும் இல்லாமல், அன்றைக்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு அராஜகம் செய்தார்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், ஆளுநர் சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு, முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உத்தரவை வழங்கி, சட்டமன்ற பேரவைத் தலைவர் சட்டமன்றத்தைக் கூட்டி முதல்மைச்சர், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட்டு, அதன் பேரில் சட்டமன்றம் கூட்டப்பட்டு பெரும்பான்மையை நிறைவேற்றுகின்றபோது எவ்வளவு அராஜகம் செய்தார்கள் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும், ஊடகத்திலும் வந்தது. அதையெல்லாம் முறியடித்துத்தான் நான் முதலமைச்சராக இருக்கின்றேன்.

அதற்குப் பிறகு, எங்கள் கட்சியை உடைப்பதற்கு எவ்வளவு சதி செய்தார்கள், எங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவின் தூண்டுதலின் பேரில் வெளியே சென்றார்கள்.

அதையும் முறியடித்து, அதற்குப் பிறகு வந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும் நாங்கள் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றிபெற்று இன்றைக்கு ஆட்சி சிறப்பாக நான்காண்டு காலம் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.

ஒரு சாதாரண, எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், ஒரு விவசாயக் குடும்பத்திலே பிறந்த ஒருவர் இன்றைக்கு நான்காண்டு காலம் நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், எந்தளவிற்கு சிறப்பான ஆட்சி என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல. நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கடுமையான வறட்சி. அதற்குப் பிறகு, புயல், அந்தப் புயலையும் எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி செய்த அரசு எங்கள் அரசு.

அதற்குப் பிறகு, கொரோனா வந்தபோது, கொரோனா காலத்திலும் சிறப்பான முறையில் செயல்பட்டதன் காரணமாக, உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா, தமிழகத்தில் இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே RT-PCR Test அதிகமாக செய்த மாநிலம் தமிழ்நாடு தான். பிரதமர் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற முதலமைச்சர்களுடைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் RT-PCR Test முழுமையாக எடுத்ததன் காரணத்தினாலே, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது, இதை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென்று குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

அந்த அளவிற்கு அம்மாவின் அரசு சிறந்த முறையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் இன்றைக்கு படிப்படியாக குறைந்திருக்கிறது.

அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்று இருந்த காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களையும் பொதுமக்களையும் காப்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, உதவிகளை செய்தோம். ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவை கொடுத்தோம்.

அதேபோல குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் கொடுத்தோம். தைப்பொங்கலன்று தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்ற அடிப்படையில் எல்லா அரிசி குடும்ப அட்டைக்கும் 2,500 ரூபாய் கொடுத்தோம்.

ஆக இப்படி துன்பம் வருகின்றபோது, மக்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்கின்ற ஒரே அரசாங்கம் அம்மாவினுடைய அரசாங்கம் என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

கேள்வி:- அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 59-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகாதா?

பதில்:- இளைஞர்களுடைய வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகத் தான் 2019 ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, ஏறத்தாழ 3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, 304 தொழில்கள் தமிழகத்தில் வருவதற்கு அடித்தளமிட்ட அரசு அம்மாவின் அரசு. இதனால், நேரடியாக 5 இலட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் நபர்களுக்கு வேலை கிடைக்கும்.

கொரோனா வந்த சோதனையான காலத்தில், இந்தியாவிலேயே ரூபாய் 60,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு, 73 தொழில்கள் வருவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம், இதன் மூலம் ஏறத்தாழ ஒரு லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அண்மையில் ரூபாய் 28,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, ஏறத்தாழ 27 தொழில்கள் தமிழகத்திற்கு வருவதற்கு அடித்தளமிட்டோம்.

இப்படி புதிய புதிய தொழில்கள் தமிழகத்திற்கு வரும்போது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் மட்டும் முழுவதுமாக வேலைவாய்ப்பு கொடுத்துவிட முடியாது, குறிப்பிட்ட அளவுதான் நாம் வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும், பொருளாதாரம் மேம்பாடு அடையவும், தொழில் வளம் பெருகுவதற்கும் அம்மாவின் அரசு இப்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு இந்தியாவிலேயே தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பை நாம் பெற்றிருக்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.