தற்போதைய செய்திகள்

துரோகிகளை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது-முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஆவேசம்

நாமக்கல்

துரோகிகளை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

விரைவில் உள்ளாட்சித் தேர்தலும், கழக தேர்தலும் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சித்தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வர இருக்கின்றன அந்தந்த வார்டு பொறுப்பாளர்கள் ஒன்றாக கலந்து பேசி நல்ல நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.

கழகத்தில் மட்டும் தான் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக வர முடியும் என்பதற்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் உதாரணம். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதி, அவருக்கு பின் அவரது மகன் ஸ்டாலின், அவருக்குப்பின் அவரது மகன் உதயநிதி என அவர்கள் குடும்பத்தினர் தான் முதலமைச்சராக வர முடியும்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார். அதனால் தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க முடிந்தது. நமது ஆட்சியின் மீது எந்த கோபம் இல்லாத போதும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியதால் தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினர்.

இப்போது அது தவறு என்று புரிந்து கொண்டனர். அம்மாவின் அரசு, எடப்பாடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற அரசாக இருந்தது. ஆனால் தி.மு.க.வினர் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இது விசைத்தறி நிறைந்த பகுதி. இப்பகுதியில் கடந்த காலங்களில் மின்சாரம் எப்படி இருந்தது. ஆனால் தி.மு.க. பதவி ஏற்ற பிறகு மின்சாரம் எப்படி உள்ளது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். 1980-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தான் நாம் வெற்றி பெற்றோம். உடனடியாக ஆட்சி கலைக்கப்பட்டது. நான் என்ன தவறு செய்தேன் என்று புரட்சித்தலைவர் மக்களிடம் சென்று கேட்டார். பிறகு மீண்டும் ஆட்சியை பெற்றார்.

கழகம் எப்போது எல்லாம் வெற்றி வாய்பை இழக்கிறதோ அப்போதெல்லாம் சில துரோகிகள் கட்சியை விட்டு செல்வது வழக்கம். நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவுடன் அன்று அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி போன்றோர் திமுகவுக்கு சென்றார்கள்.

அதேபோல் 1996-ம் ஆண்டு நமது வெற்றி வாய்ப்பை இழந்தோம். அப்போதும் சில துரோகிகள் திமுகவுக்கு சென்றார்கள். 2006-ம் ஆண்டு நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அப்போது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர். என்னுடன் இருந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றம் நடைபெறுகின்ற போது அவர்களது சுயநலத்திற்காக கட்சி மாறுகின்றனர்.

1996-ம் ஆண்டை காட்டிலும் இக்கட்சிக்கு சோதனை வரப்போவதில்லை. இது பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் கண்டெடுத்த இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்ந்த இயக்கம். இந்த இயக்கம் இருக்க வேண்டும். இரட்டை இலை இருக்க வேண்டும் என்பதற்காக சோதனை காலங்களிலும் ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒருவர்கூட திமுகவுக்கு போகவில்லை. துரோகிகளை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்.எல்.ஏ. பேசினார்.