சிறப்பு செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் – முதலமைச்சர், துணை முதலமைச்சர் டுவிட்டரில் பதிவு

சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் கூறியிருப்பதாவது:- 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திடம், விஜயகாந்த் உடல் நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.