தற்போதைய செய்திகள்

நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது என அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடைபெற்றது.

60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.

இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களை குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் அஜித்குமார் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.