தற்போதைய செய்திகள்

நந்தன் கால்வாய்- வீடுர் அணை ரூ.69.02 கோடியில் புனரமைப்பு-அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை

விழுப்புரம்

நந்தன் கால்வாய் மற்றும் வீடுர் அணை ரூ.69.02 கோடியில் புனரமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.26.57 கோடி மதிப்பீட்டில் நந்தன் கால்வாயை மேம்படுத்தும் பணியை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நந்தன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சலாற்றின் குறுக்கே கீரனூர் ஆணைக்கட்டில் உள்ள இடதுபுற கால்வாய் ஆகும். நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகளை சேர்ந்த 5255.10 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 14 ஏரிகளைச் சேர்ந்த 1566 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.


நந்கன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் அணைக்கட்டிலிருந்து விழுப்புரம் மாவட்டம் பனமலைப்பேட்டை வரை 37.88 கி.மீநீளம் கொண்டதாகும். நந்தன் கால்வாய் நீர்கடத்தும் திறனை முழுமையாக மேம்படுத்தும் விதமாக கால்வாய் தூர்வாரவும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள குறுக்கு கட்டுமானங்களை மேம்படுத்தக் கோரியும் செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி வட்டங்களைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் நீண்ட காலமாக வைத்தக் கோரிக்கையினை ஏற்று பழுதடைந்த நந்தன் கால்வாயினை புனரமைக்க முதலமைச்சரின் அறிவிப்பின்படி நந்தன் கால்வாய் புனரமைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து திண்டிவனம் வட்டம் வீடுர் அணையில் ரூ.42.44 கோடி மதிப்பீட்டில் கட்டுமானங்களை புனரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியையும் அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.