தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள், மருந்துக்கடைகள் இயங்க ஏற்பாடு – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நாகப்பட்டினம், ஏப்.29-
நாகப்பட்டினம் மாவட்டம் பொறவச்சேரி மற்றும் திருக்களாச்சேரி ஆகிய இரண்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கும் 28 நாட்கள் இன்றுடன் முடிவடைவதாலும், நோய் தொற்று ஏதும் உறுதி செய்யப்படாததாலும் ஊரடங்கு விதிமுறைக்குட்பட்டு இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்திடும் கடைகள் மற்றும் மருந்து கடைகளை இயக்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி நாயர் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் உடனிருந்தார்.

அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது :-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா இதுவரை 1406 இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன, அதில் 42 இரத்த மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர்-1, திருவள்ளுர் – 1 கூடுதல் – 44.
1346 இரத்த மாதிரிகள் கொரோனா தொற்று இல்லாதவை எனவும் பரிசோதனை முடிவில் ஆய்வறிக்கை வந்துள்ளது. இதில் சிகிச்சைக்கு பின்னர் 27 நபர்கள் குணமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 18 இரத்த மாதிரிகளுக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் வசிப்பிடங்களாக நாகப்பட்டினத்திலுள்ள 13 இடங்கள்; கண்டறியப்பட்டுள்ளன. இந்த 13 இடங்களிலும் உள்ள வீடுகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அடங்கிய பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்சமயம் நாகப்பட்டினம் டவுன், காடம்பாடி, நாகூர், திட்டச்சேரி, மயிலாடுதுறை, சீர்காழி டவுன், பொறையார் ஆகிய 7 நகர்ப்புறங்களிலும், பொறவச்சேரி, திருக்களாச்சேரி, விற்குடி, புத்தூர்(சீர்காழி வட்டம்), திருக்கடையூர் மற்றும் பெருந்தோட்டம் ஆகிய 6 ஊராட்சிகளிலும் இந்த தடைசெய்யப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் பொறவச்சேரி மற்றும் திருக்களாச்சேரி ஆகிய இரண்டு பகுதிகளிலும் கடந்த 28 நாட்களாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு தன்னார்வலர்கள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும் இருந்த 19,037 மக்கள் தொகையில் 5,399 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை வீடுவீடாக சென்று வழங்கியும், அதில் சர்க்கரை நோயாளிகள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோரை தினந்தோறும் கண்காணித்து இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களை பரிசோதனை செய்து 28 நாட்களாக 112 முன்னிலைப் பணியாளர்கள் மேற்படி பகுதிகளை 120 பகுதிகளாக பிரித்து ஒரு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில் 75 நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் யாருக்குமே நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்த இரண்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கும் 28 நாட்கள் முடிவடைவதாலும், நோய் தொற்று ஏதும் உறுதி செய்யப்படாததாலும் ஊரடங்கு விதிமுறைக்கு உட்பட்டு நாளை (இன்று 29.04.2020) காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்திடும் கடைகள் மற்றும் மருந்து கடைகளை இயக்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் மருத்துவ முகாம்களின் மூலம் நோய்தொற்று கண்டறியும் பணிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.