சிறப்பு செய்திகள்

நாங்குநேரியில் நடமாடும் பதநீர் கொள்முதல் நிலையம் – கழக வேட்பாளர் தச்சை என்.கணேசராஜா உறுதி

திருநெல்வேலி

நாங்குநேரியில் பனைதொழிலை மேம்படுத்த நடமாடும் பதநீர் கொள்முதல்நிலையம் அமைக்கப்படும் என்று கழக வேட்பாளர் தச்சை கணேசராஜா உறுதி அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளரும், மாவட்ட கழக செயலாளருமான தச்சை என்.கணேசராஜா கலுங்கடி, சூரன்குடி, சுப்பிரமணியபுரம், கடம்போடு வாழ்வு, வடுகச்சிமதில், தோப்பூர், டோனாவூர், மாவடி, ஏர்வாடி, கட்டளை உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதியில் பனைத்தொழில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் சிறப்பாக இருந்தது. சித்திரை முதல் நாளில் கிராமம்தோறும் பதநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

பனைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் நவீன பனையேறும் கருவிகள் வாங்க மானியம் கிடைக்க செய்யப்படும். நகரப் பகுதிகளில் பதநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆகவே, நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிடைக்கும் பதநீரை கூட்டுறவுச்சங்கம் மூலம் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் பதநீர் கொள்முதல் மையத்தை உருவாக்கி வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

ஆவின் மூலம் கால்நடைகள் வழங்கவும், கழக அரசின் சாதனைத் திட்டங்களில் ஒன்றான கறவைமாடுகள், இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் அதிகமானோருக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்குநேரி-களக்காடு இடையே கூடுதலாக டவுண் பஸ் மற்றும் மினிபஸ்கள் இயக்கப்படும். திருநெல்வேலி-டோனாவூர்-களக்காடு இடையே இரவு நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். களக்காட்டில் வாழை கொள்முதல் நிலையமும், வாழை ஆராய்ச்சி நிலைய தகவல் மையமும் அமைக்கப்படும்.

இவ்வாறு கழக வேட்பாளர் தச்சை என்.கணேசராஜா பேசினார்.