தற்போதைய செய்திகள்

‘நிசான்’ கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா?

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி

கடலூர்

நிசான் கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா? என்று கடலூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பினார்.

கடலூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் புதுப்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுப்பாளையம் பகுதி செயலாளர் வழக்கறிஞர் எம்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

மாவட்ட அவைத்தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், மாநில மீனவரணி இணை செயலாளர் கே.என்.தங்கமணி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர்கள் கே.நவநீதக்கண்ணன், கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பாண்டியராஜன், தலைமை கழக பேச்சாளர் வி.பஞ்சாட்சரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது:-

கழக ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம் மற்றும் அதிக தொழிலாளர்கள் உள்ள மாநிலம் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வந்தது. கழக ஒருங்கிணைப்பாளர் நிசான் கார் தொழிற்சாலை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு தொழில்துறை அமைச்சர் வெற்றிகரமாக நிசான் கார் நிறுவனம் தொழிலை தொடரும் என கூறிவிட்டு செமி கண்டக்டர்கள் தட்டுப்பாடு காரணத்தால் சீரான முறையில் உற்பத்தி நடைபெறும் என்று கூறியிருப்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்கு வலு சேர்ப்பது போல் உள்ளது.

வெற்றிகரமாக தொழில் தொடரும் என்றும், சீரான முறையில் உற்பத்தி நடைபெறும் என்றும் ஒரே அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னுக்கு பின் முரணாக கூறியிருப்பதால் நிசான் கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை தொழில்துறை அமைச்சரே ஒப்புக் கொள்கிறாரா?

ஆண்டிற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கார் உற்பத்தி செய்து வந்த நிசான் கார் தொழிற்சாலைக்கு தர வேண்டிய ஊக்கத்தொகையை கொடுத்தீர்களா? செமி கண்டக்டர்கள் எங்கு உற்பத்தி செய்கிறார்களோ அங்கு அதை தடையில்லாமல் வாங்க வழி வகை செய்ய வேண்டும்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் நிசான் கார் நிறுவனம் அதன் தொழிலை வெற்றிகரமாக தொடர அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தந்து அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்ய வேண்டும்.

நோக்கியா தொழிற்சாலை கழக ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டது என்று மற்றொரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். நோக்கியா தொழிற்சாலைக்கு ரூ.2000 கோடி வரியை 2012-ம் ஆண்டு விதித்து அந்த நிறுவனம் மூட காரணமாய் இருந்தது மத்தியில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு.

பலமுறை சட்டமன்றத்தில் அம்மா அவர்கள் கோரிக்கை விடுத்தும் அதை காங்கிரஸ் அரசு நீக்காத காரணத்தால் வேறு வழியில்லாமல் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அது கூட அம்மா ஆட்சிக் காலத்தில் சால்கான் நிறுவனமாக மாறி தற்போது செயல்பாட்டில் உள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளார். ஹூண்டாய் நிறுவனம் 25,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டிற்கு 6 லட்சம் கார்களை தயாரிக்கும் முன்னணி தொழிற்சாலையாக அம்மா ஆட்சிக் காலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் இருக்கிறது.

ஹூண்டாய் குழுமத்தின் மற்றொரு தொழிற்சாலை தான் கியா மோட்டார்ஸ். ஒரே குழுமத்தில் இருப்பவர்கள் ஒரே மாநிலத்தில் தொழில் செய்யாமல் வேறு, வேறு மாநிலத்தில் தொழில் முதலீடு செய்ய நினைப்பது அந்த குழுமத்தின் கொள்கை முடிவு. அதன் அடிப்படையிலேயே அந்த நிறுவனம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றதே தவிர வேறு காரணம் இல்லை.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2008-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் அல்ஸ்ட்டோம் கம்பெனி ஆந்திர மாநிலத்திற்கு ஏன் சென்றது? கேட்பரீஸ் சாக்லேட் தயாரிக்கும் கம்பெனி ஏன் வேறு மாநிலத்திற்கு சென்றது. இந்த தொழிற்சாலைகளை எல்லாம் தவற விட்ட அரசு தி.மு.க. அரசு. மானாமதுரையில் கருணாநிதி ஆட்சிகாலத்தில் வீடியோகான் தொழிற்சாலை ஏன் மூடப்பட்டது.

இதெற்கெல்லாம் தங்கம் தென்னரசு பதில் சொல்வாரா? ஹால்தியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் நியூயார்க்கில் போடப்பட்ட முன்மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

இது ஏன் என்று தொழில்துறை அமைச்சர் விளக்குவாரா? அதன்பிறகு 2011-ல் ஆட்சி பொறுப்பேற்ற அம்மாவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டினோம்.

அதனாலேயே பல தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியதால் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. நாங்கள் போட்ட அடித்தளத்தால் இன்று தொழில்துறையில் தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. அதை நீங்கள் தக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்திற்கு ரூ.74 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை கொண்டு வருவேன் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதற்கான கட்டமைப்பு உங்களிடம் உள்ளதா? தடையில்லா மின்சாரம் தந்து தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய . திட்டம் ஏதாவது தயாரித்து வைத்துள்ளீர்களா? என்ற கேள்வியை நான் இங்கு வைக்கிறேன்.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆட்சியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கென்று கொண்டுவந்த பல மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்துள்ளார்கள். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று இந்த மே தினத்தில் சூளுரைப்போம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலளாரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசினார்.