தமிழகம்

நியாயவிலைக் கடைகளின் மூலம் தலா 2 முகக்கவசங்கள் ஆகஸ்டு 5ம்தேதி வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

நியாயவிலைக் கடைகளின் மூலம் தலா 2 முகக் கவசங்கள் ஆகஸ்டு 5-ம்தேதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து, காணொலிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றிய முடிவுரை வருமாறு:-

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த கொடிய வைரஸ் நோய் இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த 4 மாதங்களில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது.

இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக கிடைக்கக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். நியாயவிலைக் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கின்றன. நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு, டோக்கன் விநியோகித்து, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசை பொறுத்தவரை, மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தொய்வில்லாமல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு, ஏழை, எளிய மக்களுக்கு முகக்கவசம் வாங்கும் சூழ்நிலை இல்லையென்றாலும், அரசாங்மே வழங்கலாம் என்ற அறிவிப்பை கொடுத்து, அதை நான் துவக்கி வைத்திருக்கிறேன். முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி தவிர, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளின் மூலம் தலா 2 முகக்கவசங்கள் வழங்குவது ஆகஸ்டு 5-ம்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.