சிறப்பு செய்திகள்

தேனி மாவட்டத்தில் கழகம் சார்பில் குளம் கண்மாய்கள் சீரமைப்பு பணி – துணை முதல்வர் துவக்கி வைத்தார்

தேனி

தேனி மாவட்ட கழகம் சார்பில் குளங்கள், கண்மாய்கள் சீரமைப்பு பணியை கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் குடிமராமத்து பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

மேலும் தேனி மாவட்டத்தில் மாவட்ட கழகம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேல்மங்கலம் நெடுங்குளம், வெங்கடாசலபுரம் தாதயகவுண்டன்குளம் கண்மாய், கெங்குவார்பட்டி மத்துவார்குளம் கண்மாய், பொட்டல்வண்ணான்குளம், லட்சியம்பட்டி குளம் சிலமலை பாறைக்குளம் கண்மாய், சூலப்புரம் கண்மாய், பொட்டிபுரம் கட்டபொம்மன்குளம் கண்மாய், பல்லவராயன்பட்டி தாதன்குளம் கண்மாய், கோகிலாபுரம் தாமரைக்குளம் கண்மாய், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன்குளம் கண்மாய், தெப்பம்பட்டி வெள்ளைப்பாறை கண்மாய், வரதராஜபுரம் அதிகாரிகுளம் கண்மாய், தங்கம்மாள்புரம் கோவில்பாறை கண்மாய் உள்ளிட்ட 12 கண்மாய்கள் தூர்வாரவும், சீரமைக்கப்படவும் உள்ளது.

தூர்வாரும் பணியில் நீர்வரத்து கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள், மதகுகள் புனரமைத்தல், கலுங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல் மேலும் நீர்நிலைகளில் உள்ள செடிகளை அகற்றுவதுடன் குளங்களின் மேடு பள்ளங்களை சரிசெய்து அதிகப்படியாக உள்ள மண்ணை கொண்டு கரைகளை பலப்படுத்துவதுடன், கரையோரங்களில் கரையை பாதுகாக்கும் வகையில் மரங்களை நட்டு பராமரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பணிகளை துவக்கும் வகையில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நெடுங்குளம், கெங்குவார்பட்டி மத்துவார்குளம் ஆகிய கண்மாய்களில் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கரையோரங்களில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.

குளங்கள் சீரமைப்பால் மழை காலங்களில் தண்ணீரை அதிகளவு தேக்குவதால் அந்தந்த குளங்களின் மூலம் பாசன வசதி பெறும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். மேலும் குளங்களில் அதிக தண்ணீர் தேக்குவதால் நிலத்தடி நீரும் உயரும். அதன் மூலம் விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான நீரை தங்குதடையின்றி பெற்று விளைச்சல் அதிகரித்து வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ், முன்னாள் எம்.பி ஆர்.பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவக்குமார், பசுமை உலகம் வி.ப.ஜெயபிரதீப், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட மீனவரணி செயலாளர் வைகை கருப்புஜி, கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் காட்டுராஜா மற்றும் தீபன் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.