தற்போதைய செய்திகள்

நிர்வாக வசதிக்காக கல்வராயன் மலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா – முதலமைச்சர் பேட்டி

சென்னை 

நிர்வாக வசதிக்காக கல்வராயன் மலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் வைத்த கோரிக்கையை அடிப்படையாக வைத்து நான் சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, நானே நேரடியாக வந்து துவக்கி வைத்தேன்.

அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசும் இணைந்து, ரூபாய் 382 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க சிறுவங்கூர் கிராமத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் அரசு இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உருவாக்கித் தந்திருக்கிறது.அதேபோல, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மகப்பேறு மற்றும் குழந்தைகள் மையக் கட்டடம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் பல்வேறு புதிய கட்டடங்கள் ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் அம்மாவின் அரசால் இந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 1.57 கோடி மதிப்பீட்டில் சி.டி. ஸ்கேன் நிறுவப்பட்டு வெகு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வெகுவிரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் நிறுவப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களைக் காட்டிலும் அதிக உபகரணங்களை அரசு மருத்துவமனைகளில் நிறுவி ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கக் கூடிய சூழ்நிலையை அம்மாவின் அரசு உருவாக்கித் தந்துள்ளது.

ஏழை, எளிய மக்கள் அரசை நாடி செல்வதைக் காட்டிலும், அரசாங்கமே மக்களை நாடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென்ற அடிப்படையில் முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம் என்ற திட்டத்தை சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54,133 மனுக்கள் பெறப்பட்டு 15,425 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் 4,521 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் இந்த மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. கல்வராயன் மலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா ஒன்று நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டியளித்தார்.