சிறப்பு செய்திகள்

நீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி

கோவை

நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும் காங்கிரசும் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:-

தி.மு.க. ஆட்சி வந்து அதிகாரத்தை கைப்பற்றும் என்று ஸ்டாலின் சொல்கிறார். எதற்கு நிலங்களை அபகரிக்கத்தான். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏழை மக்களிடத்தில் ஏமாற்றி பெறப்பட்ட நிலங்களை மீட்டுக் கொடுப்பதற்காகத்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நில அபகரிப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கினார். ஏழை, எளிய மக்களின் நிலத்தினை மீட்டு கொடுத்தார்.

இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் செயல்படும் எங்களது அரசு கோவை மாவட்டத்தில் எண்ணற்ற பணிகளை செய்து கொடுத்துள்ளது. கிணத்துக்கடவில் அமைக்கப்பட்டுள்ள பாலம் அம்மாவின் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டது. அம்மாவின் அரசு மத்திய அரசுடன் போராடி பொள்ளாச்சியிலிருந்து கோயம்புத்தூர் வரை கான்கிரீட் ரோடு அமைத்துக் கொடுத்துள்ளோம்,

தமிழ்நாட்டிலேயே இது ஒன்றுதான் கான்கிரீட் ரோடு. நாங்கள் செய்கிறோம், அதனால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் நாட்டு மக்களிடமிருந்து பிடுங்குவதற்காகத்தான் கட்சி வைத்துள்ளீர்கள். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவா அரசாங்கம் நடத்தினீர்கள்.

எடப்பாடி பழனிசாமி தான் செல்லும் இடங்களிளெல்லாம் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார் என தி.மு.க. தலைவர், எங்கு சென்றாலும் தெரிவித்து வருகிறார். இதில் உங்களுக்கென்ன கஷ்டம். விவசாயி தன்னை விவசாயி என்றுதானே சொல்ல முடியும். இன்றைக்கும் விவசாயத் தொழில் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயி என்று சொன்னாலே ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது.

ஒரு ரௌடிதான் தன்னை ரௌடி என்று ஊரில் சொல்லிக் கொள்வான். அதுபோல, எடப்பாடி பழனிசாமி எங்கு போனாலும் விவசாயி என்று சொல்கிறார் என்று ஸ்டாலின் தெரிவிக்கிறார். ரௌடிக்கும் விவசாயிக்கும் வித்தியாசம் இல்லையா? எப்படி ஒப்பிட்டுப் பேசுகிறார். எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு. அப்படிப்பட்ட எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே.

விவசாயி நாட்டு மக்களுக்காக உழைப்பவர். அவரை தரக்குறைவாக பேசாதீர்கள். தி.மு.க. ஆட்சியில் விவசாயப் பம்பு செட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் குறைக்க வேண்டுமென விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அந்தப் போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தி பலர் இறந்திருக்கிறார்கள். அதனால்தான் விவசாயிகளிடம் அவர் கோபமாக இருக்கிறார். அப்படி இறந்த விவசாயிகளின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் உதவி செய்தது அம்மாவின் அரசு.

எங்கள் அரசு மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் ரீதியாக நேருக்கு நேர் சந்திக்கத் திராணியில்லாத திமுக தலைவர் குறுக்கு வழிகளை கையாளுகிறார், அது ஒருபோதும் எடுபடாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் 1,76,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது குறித்து அம்மா அவர்கள் காலத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு, வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

போதிய சாட்சி, ஆதாரம் இல்லையென்று தள்ளுபடி செய்து, தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்கள். இந்திய நாடு மட்டுமல்ல உலகமே வியக்கத்தக்க ஊழல் செய்த ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம். அவர்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது என்று கேட்கிறேன். இப்போது அந்த வழக்கில் மேல்முறையீடு செய்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய். நாங்கள் மக்களுக்கு என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை சொல்கிறோம், பாலம் கட்டியிருக்கிறோம், குடிதண்ணீர் கொண்டு வருகிறோம், விவசாயிகளுக்கு நன்மை செய்கிறோம், குடும்ப அட்டைகளுக்கு உதவிகளை செய்திருக்கிறோம். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநிலத்தில் 2,000 அம்மா மினி கிளினிக்கைக் கொண்டு வந்து வரலாற்றைப் படைத்த அரசு அம்மாவின் அரசு. உங்கள் ஆட்சியில் மக்கள் பயன் பெற்றார்களா

எங்கு போனாலும், நீட் தேர்வு, நீட் தேர்வு என்று அது குறித்து பச்சைப் பொய் பேசிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்ததற்கு காரணமே தி.மு.க.வும் காங்கிரசும் தான். 2010-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது, தி.மு.க. அந்த ஆட்சியில் அங்கம் வகித்தது. அந்த காலக்கட்டத்தில்தான் நீட் தேர்வு அறிமுகம் செய்தார்கள், நாங்கள் கொண்டு வரவில்லை. கொண்டு வந்தது அவர்கள், தடுப்பதற்கு முயற்சி செய்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம்.

உச்ச நீதிமன்ற வழக்கின் காரணமாக இதை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 41 சதவீதம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 6 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பு படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஆகவே, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பை உருவாக்குவதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்து, சட்டத்தை நிறைவேற்றி, இப்போது 332 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.

உங்கள் ஆட்சியில் இப்படி கிடைத்ததா? பல் மருத்துவக் கல்லூரியில் 92 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். இப்படி, ஏழை, எளிய மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்த ஒரே அரசு அம்மாவின் அரசு.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.