தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவான முடிவை தி.மு.க. அரசு எடுக்கவில்லை-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை
நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவை தி.மு.க. அரசு எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பாக கலந்தாய்வு கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக ஆட்டோ வாங்கும் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் 25,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று கழகம் சார்பில் தேர்தல் அறிக்கையாக கொடுத்தோம். ஆனால் திமுக சார்பில் புதிதாக ஆட்டோ வாங்கும் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். அதை அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் கொரோனா முதல் அலையின் போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நலவாரிய தொழிலாளர்கள் என 36 லட்சம் பேருக்கு தலா 2000 ரூபாய் நிவாரண உதவி, உணவுப்பொருட்களை வழங்கினார்.

அதேபோல் தற்போது இரண்டாம் அலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமம் அடைந்துள்ளனர் ஆகையால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் நலவாரிய தொழிலாளர்களுக்கு மற்றும் 2000 ரூபாய் நிவாரண உதவி, உணவுப்பொருட்களை அரசு வழங்கிட வேண்டும்.

நீட்தேர்வை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோது அதற்கு அழைப்பு விடுத்தது திமுக. ஆரம்பம் முதலே அம்மாவும் அதனைத்தொடர்ந்து எடப்பாடியார், ஓபிஎஸ் ஆகியோர் கடுமையாக எதிர்த்து போராடினர்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருந்தாலும் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அளித்து அதன் மூலம் 435 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வசதியை உருவாகி கொடுத்துள்ளார் எடப்பாடியார். ஆனால் இன்றைக்கு நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவை தி.மு.க. அரசு எடுக்கவில்லை.

மத்திய அரசில் 17 வருடம் அங்கம் வகித்த தி.மு.க கச்சத்தீவு குறித்தும் முல்லைப்பெரியாறு, காவேரி குறித்தும் எந்த உரிமையை பற்றியும் பேசவில்லை. ஆனால் இதே நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் காவேரி பிரச்சினைக்காக அவையை முடக்கி வைத்த வரலாறு கழகத்தையே சேரும். இதன் மூலம் காவேரி ஆணையத்தை அமைத்தோம். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வு குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் ஏன் கேள்வி கேட்கவில்லை.

கொரோனா கால கட்டத்தில், முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தார். தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி தான் முதல்வராக வேண்டும் என விரும்பினார்கள்.

ஆனால் இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்கள் இரட்டை இலையை தோற்கடிக்க செயல்பட்டதால் கழகம் இந்த முறை ஆட்சியை பறிகொடுத்தது. இந்த துரோகத்தை செய்தவர்கள் அதற்குரிய பாவத்திற்கான பரிகாரத்தை தேடித்தான் ஆக வேண்டும்.

7 கோடி நபர்களுடன் பேசினால் என்ன இரட்டைஇலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் கரங்களில் ஓர் அணியாக பயணித்து கொண்டிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட அணி நிர்வாகிகள் சிக்க ராஜ பாண்டியன், பால்பாண்டியன், மதுரை பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.