தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?வி.பி.பி.பரமசிவம் கேள்வி

செங்கல்பட்டு,

நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? என்று கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் மற்றும் திருப்போரூர் பேரூராட்சி கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்போரூரில் நடைபெற்றது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளரும், மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல், கழக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தண்டரை மனோகரன், கழக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாவலூர் முத்து, மாவட்ட அவைத்தலைவர் ம.தனபால், மாவட்ட கழக துணை செயலாளர் எ.யஸ்வந்த்ராவ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி.வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஏழை, எளிய மக்களை ஏமாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது பொய்யான வழக்குகளை தொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்திதான் தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடிந்தது. அதேபோல் தற்போது நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 என பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிதான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. இதனால்தான் மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பினை கழகம் இழந்தது.

தி.மு.க.வையும், மின்வெட்டையும் பிரிக்க முடியாது. அனிதாவின் மரணத்தில் அரசியல் செய்த ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பேசிவிட்டு இப்போது மவுனம் காப்பது ஏன்? கழகம் போன்று சிறப்பான ஆட்சியை கொடுக்க இயலாத தி.மு.க. அம்மா உணவகம் உள்பட பல்வேறு இடங்களில் இதயதெய்வம் அம்மாவின் படங்களை மறைக்க முயற்சிக்கிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோர் நமக்கு கற்றுக்கொடுத்த அரசியல் பாடங்களை இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்போம். இதயதெய்வம் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவினருடன் இணைந்து செயல்படுங்கள். கழக வழக்கறிஞர் பிரிவு உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் மாபெரும் வெற்றியை நீங்கள் ஈட்ட வேண்டும். திருப்போரூர் கழகத்தின் கோட்டையாக்க உறுதிகொண்டு செயல்படுங்கள்.

இவ்வாறு கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசினார்.

ஒன்றிய கழக செயலாளர்கள் தையூர் எஸ்.குமரவேல், குட்டி என்கிற நந்தகுமார், பேரூராட்சி செயலாளர் ஜி.முத்து ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கழக பாசறை நிர்வாகிகள் இருக்காட்டுக்கோட்டை எஸ்.சிவக்குமார், கிஷோர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் குமார், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவளம் எம்.பாஸ்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவராமன் ஒன்றிய கழக அவைத் தலைவர்கள் ஆமூர் ஏழுமலை, பி.டி.ராஜேந்திரன், நிர்வாகிகள் கணேசன், செல்வம், அருள்பிரகாஷ், உமாசங்கர், வினோத் கண்ணன், மேரி, சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய பாசறை செயலாளர் வசந்த் நன்றி கூறினார்.