நீட் தேர்வை ரத்து செய்வதற்கு இன்று வரை போராடுகிறோம் – முதலமைச்சர் பேச்சு

சென்னை,
நீட் தேர்வை ரத்து செய்ய இன்று வரை கழக அரசு போராடி வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருவள்ளூர் மாவட்டம், போரூர் சந்திப்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாது:-
கல்வித்தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் அந்தந்தப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் எங்கு சென்றாலும் நீட் தேர்வு குறித்து பச்சைப் பொய் பேசிவருகின்றார்.
பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்குத்தான் வழங்க வேண்டும். 2010ல் மத்தியில் தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அந்த கால கட்டத்தில் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த போதுதான் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போழுது பதவி வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று அதை எதிர்க்கவும் இல்லை, ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கவும் இல்லை.
தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. ஆனால் கழக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு இன்று வரை போராடிக்கொண்டிருகிறது. இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்ற சூழநிலையினால் நாம் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
அரசு பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. நான் கிராமத்தில் பிறந்தவன். அதனால் கிராம மக்களின் தேவையை நன்கு அறிந்து, அவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில இடம் கிடைத்தது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திய காரணத்தினாலே இந்த ஆண்டு 313 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் பயிலவும், 92 மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவம் பயிலவும் வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது, இதன் மூலம் 1650 புதிய மருத்துவ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக 130 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்க உள்ளது. இதனால், அடுத்த ஆண்டு முதல் 443 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு அம்மாவின் அரசு.
அதேபோல, பல் மருத்துவம் பயில 150 ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குண்டான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும். ஏழை எளிய மக்கள் பெற்றெடுத்த குழந்தைகள் மருத்துவர்களாக ஆக வேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியம்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.