தற்போதைய செய்திகள்

நீதி நிர்வாகத்திற்காக ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

சென்னை

போக்சோ வழக்குகளை விசாரிக்க 16 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சாலைப்பாதுகாப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்ததனால், 2016-ம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்பிற்கு காரணமான விபத்துகளின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 8,060 ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, காவல்துறை, போக்குவரத்து துறை, மாநில போக்குவரத்து துறை நிறுவனங்கள், நெடுஞ்சாலைத்துறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், தேசிய மற்றும் உலகளவில் பல விருதுகளை தமிழ்நாடு அரசு வென்றது. இந்த முயற்சிகள் முன்மாதிரியானவை என பாராட்டப்பட்டுள்ளன. நீதியை விரைவாகவும் முனைப்பாகவும் வழங்குவது, ஒரு திறம்பட நிர்வகிக்கப்படும் நவீன நாட்டின் முக்கிய அம்சமாகும்.

2019 மற்றும் 2020-ம் ஆண்டின் இந்திய நீதி அறிக்கைகளில் நீதித்துறை என்ற பிரிவில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 520 நீதிமன்றங்களை இந்த அரசு அமைத்துள்ளது.

2012-ம் ஆண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் (போக்சோ), வழக்குகளை விசாரணை மேற்கொள்வதற்காக 16 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றங்களின் கட்டுமானப்பணிகள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,332 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய நீதிமன்றக் கட்டடங்களை கட்டுவதற்காக 289.78 கோடி ரூபாய் உட்பட நீதி நிர்வாகத்திற்காக 1,437.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.