சிறப்பு செய்திகள்

நீலகிரி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை – முதலமைச்சர் உறுதி

நீலகிரி

நீலகிரி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பதற்கு அரசு முனைப்புடன் செயல்படும் என்று
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்தும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் முதற்கண் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில், நீலகிரி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்தார். அம்மா அவர்கள் நீலகிரி மாவட்ட மக்களின் நன்மை கருதி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி, நடைமுறைப்படுத்தி மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றியவர். நீலகிரி மாவட்டம் என்றால் இதயதெய்வம்

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவுதான் வரும். அந்தளவிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் மீது அன்பு கொண்டவர். ஆகவே, நீலகிரி மாவட்ட மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகிற அரசாக அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவலைத் கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தீவிரமாக தொடர்ந்து எடுத்து வருவதன் விளைவாக, நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்பொழுது இந்தத் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 2,500-க்கும் குறைவாக உள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோரின் ஆலோசனைகளின்படி நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால், இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்களில் குறைவாக இருந்த இந்நோய்த் தொற்று தற்பொழுது அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், ஆரம்பத்திலேயே தீவிரமாக முயற்சி எடுத்ததன் விளைவு இந்நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. நடமாடும் மருத்துவக் குழுக்களும், அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்களும் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, மக்களுக்கு பரிசோதனைகள் செய்து, அறிகுறிகள் தென்பட்டவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளித்து, குணமடையச் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்றை கண்டறிய பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். தற்பொழுது இந்நோய்த் தொற்று குறைந்திருந்தாலும்கூட, சராசரியாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்கிறோம். இவ்வாறு அதிகளவில் RTPCR பரிசோதனை செய்வதால் இந்நோய்த் தொற்றுப் பரவலை தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையும், பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இருந்தாலும்கூட, இங்குள்ள மக்கள் உயர்தர சிகிச்சை பெற கோயம்புத்தூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதைக் கருத்தில் கொண்டு, அம்மாவின் அரசு, நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 447.32 கோடி மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என்று அறிவித்து, கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்கல்லூரியில், ஆண்டுதோறும் 150 மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரண்டையும் நிறைவேற்றித் தந்த அரசு அம்மாவின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டு மட்டும் கோவிட்-19 சிறப்பு நிதிக் கடனாக ரூபாய் 56 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 861 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 7.54 கோடி வழங்கியுள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் 8,247 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் 25,339 பெண்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். கடந்த 2019-20-ம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்பாக 225 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 225 கோடி ரூபாயும் முழுமையாக வழங்கப்பட்டு இலக்கு அடையப்பட்டது. 2020-21ஆம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்பாக 281 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 185 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, பேரூராட்சி பகுதிகளில் 2015-2016-ம் ஆண்டு முதல் 2018-2019 வரை அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2,394 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதியளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 153 வீடுகள் ரூபாய் 382 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினருக்காக ஒரு தொழிற்பயிற்சி நிலையம் ரூபாய் 2.68 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித்துறை மூலம் 1,794 வீடுகள் ரூபாய் 44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

ஜென்ம நிலங்களின் மொத்த விஸ்தீரணம் 80,088 ஏக்கர் ஆகும். ஜென்ம நிலத்தில் வன நிலமாக மாற்றப்பட்டது 29,948 ஏக்கர். ஜென்ம நிலத்திலுள்ள 6 பழங்குடியின குக்கிராமங்களுக்கு வன உரிமை சட்டம் 2006-ன் கீழ், நீலகிரி மாவட்டத்தில் 1663 தனிநபர்களுக்கும், 111 இனங்கள் சமுதாய உரிமைகளுக்காகவும் வழங்கப்பட்டிருக்கிறது. ஜென்ம நிலத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு 1,317 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன, குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன,

மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூபாய் 6.62 கோடி மதிப்பீட்டில் 49 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 295 எண்ணிக்கையிலான தனிநபர் உரிமைகள் வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்காக அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதேபோல, தொழில் துறையிலும் பல திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு இன்கோசெர்வ், நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரமாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாகவும் இருந்து வருகிறது. கைகாட்டி, குந்தா, மஞ்சூர், பந்தலூர், சாலிஸ்பரி ஆகிய இடங்களில் செயல்படும் இன்கோசெர்வின் தொழிற்சாலைகளில் உள்ள பழுதடைந்த இயந்திரங்களை மாற்றி, புதிய இயந்திரங்கள் பொருத்தவும், இயங்கும் இயந்திரங்களை மேம்படுத்தவும், அடிப்படை புனரமைப்புவதற்கும், நவீனப்படுத்துவதற்கும் ரூபாய் 17.68 கோடி நபார்டு திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று வழங்கப்படும். இந்த இயந்திரங்களெல்லாம் மாற்றப்பட்டு நவீனப்படுத்துவதன் மூலமாக, இந்த நிறுவனம் மென்மேலும் வலிவும் பொலிவும் பெறும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு, அம்மாவின் அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நீலகிரி மாவட்ட மக்களுடைய பிரச்சனைகளை படிப்படியாக தீர்ப்பதற்கு அரசு முனைப்புடன் செயல்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.