தற்போதைய செய்திகள்

பதவி வெறி பிடித்திருக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

சென்னை, மார்ச் 9-
முதலமைச்சர் பதவியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பதவி வெறி பிடித்து இருக்கும் ஸ்டாலினுக்கு இம்முறையும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க அம்மா அவர்களின் அரசு அதற்கான நவீனத் திட்டத்தையும் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வந்துள்ளது. தங்களது ஆட்சிக் காலத்தில் செய்த அராஜக செயல்களால் மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்த திமுக தலைவர் ஸ்டாலின் கழக ஆட்சியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் என திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என கண்கொத்தி பாம்பாய் அலைந்து கொண்டிருக்கும் அவர், கழக ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டங்களை கூட தெரிந்து கொள்ளவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. மக்களைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பதவியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பதவி வெறி பிடித்து இருக்கும் அவருக்கு இம்முறையும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.