தற்போதைய செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

சென்னை,

பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசியதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 50 சதவீதமாக இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு, உரிய நாளான ஜூன் 12-ம் தேதியன்றே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இதனால், சாதனை அளவாக 4.12 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டது. போதுமான பாசன வசதிகள் கிடைத்ததாலும், உரிய நேரத்தில் விதைகள் மற்றும் பிற இடுபொருட்கள் வழங்கப்பட்டதாலும், விவசாயிகள் ஒரு நல்ல மகசூலை எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால், தொடர்ச்சியான இரண்டு புயல்களான நிவர் மற்றும் புரெவி மற்றும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையின் காரணமாக அறுவடை நேரத்தில் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்து, அவர்களின் நம்பிக்கையை சிதைத்தது. முற்றிய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் காட்சிகள் இதயத்தை உருக்கின.

முதலமைச்சரும் ஒரு விவசாயியாக இருப்பதால், விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு, விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். பயிர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 7,410 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், நெல் மற்றும் இதர இறவை பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 13,500 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், பல்லாண்டு காலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

முதலமைச்சர் நிவாரணம் பெறுவதற்கு உச்சவரம்பான 2 ஹெக்டேர் பரப்பளவு என்ற அளவுகோலையும் நீக்கிவிட்டார். இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் உள்ள 15.25 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, மொத்தம் 1,715 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, முதலமைச்சர், விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனால், 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய மொத்தம் 12,110.74 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட, முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.