தற்போதைய செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் நீரேற்று பாசனதாரர்கள் சங்கம் அமைக்க அனுமதி-அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்

பரமத்திவேலூர் பகுதியில் நீரேற்று பாசனதாரர்கள் சங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஊராட்சி ஒன்றியம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சிகள் சுகாதார துணை இயக்குநர் சோமசுந்தரம் முன்னிலையில், திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் பரமத்திவேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சூரியம்பாளையம், செ.புதுப்பாளையம் ஆகிய இடங்களிலும், பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெடியரசம்பாளையம், தார்க்காடு, ஆவத்திபாளையம் ஆகிய இடங்களிலும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி திறந்து வைத்தார்.

மேலும் 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் காசோலைகளையும், அம்மா தாய்சேய் நல பெட்டகங்களையும், பெண்குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்தில் 47 மினி கிளினிக்குகள், 6 நடமாடும் மினி கிளினிக்குகள் சேர்த்து 53 மினி கிளினிக்குகள் தொடங்க உத்தரவிட்டார். விவசாயிகளின் கடன் ரூ.12,110 கோடியை முதலமைச்சர் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளதால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

குறிப்பாக நாமக்கல் மாவட்டத்திலேயே பரமத்தி வேலூர் பகுதியில் தான் அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் மட்டும் ரூ.118 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கோடைக்காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால் நீரேற்று பாசனதாரர்கள் சங்கம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

முன்னதாக பரமத்திவேலூர் வட்டம், இருட்டணை முதல் சுங்ககாரன்பட்டி வரை ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு பணியை அமைச்சர் பி.தங்கமணி பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தார்.