சிறப்பு செய்திகள்

பள்ளிகள் – தியேட்டர்களை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவு – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில்,மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசியதாவது :-

கடந்த 12.10.2020 அன்று மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் பருவமழை முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த வருடம் இயல்பான அளவில் மழைப்பொழிவு இருக்கும். அனைத்து மாவட்டங்களும், குறிப்பாக கடலோர மாவட்டங்கள் பருவ மழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகளின் கதவுகள், மற்றும் கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புயல் காப்பகங்கள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் கிருமி நீக்கம் செய்து அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வண்ணம் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் காப்பகங்களை கண்டறிந்து அவற்றையும் தயார் செய்ய வேண்டும். மலைப்பாங்கான மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களை இருப்பில் வைத்தும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளை தூர் வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியர்கள், நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக தொடங்க வேண்டும். அதேபோல், நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்டு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க, போதுமான அளவு தார்பாய்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வரலாற்று சாதனையாக அம்மாவின் அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி உள்ளது. நான் ஏற்கனவே கடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியது போல அப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு செய்து, பணியினை மேலும் துரிதப்படுத்தி, அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்க வேண்டும்.

திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளை திறக்க கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. அதுபற்றி தற்போது நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வுக் கூட்டத்திற்கு பின், மருத்துவ நிபுணர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

கோயம்பேடு வளாகத்தில் உணவு தானிய விற்பனை அங்காடிகளும், மொத்த காய்கறி விற்பனை அங்காடிகளும் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 7,500 வியாபாரிகள் தினமும் இந்த அங்காடியை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நோய்ப் பரவல் தடுப்பை உறுதி செய்ய தினசரி கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

தற்காலிக இடத்தில் செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகளை திறப்பதற்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் அங்காடியைச் சார்ந்துள்ள அனைவரது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டும், அதேநேரத்தில் பொதுமக்களுக்கு குறைவான விலையில் காய்கறி, கனிகள் கிடைத்திட ஏதுவாகவும், சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்தாலோசித்து, கோரிக்கை குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.