சிறப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணை நிறுத்தி வைப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச்செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வினை தொடங்கி வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

கோவிட் -19 வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதனால் தான், பாரதப் பிரதமர் தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பாராட்டினை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தர அயராது களப்பணியாற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்ளவும், தமிழ்நாட்டில் இருந்து கொரோனாவை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்கென நமது நடவடிக்கைகளை மேலும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். எனது தலைமையில் 14 முறை மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை, எனது தலைமையில் 10 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளன. தலைமைச் செயலாளர் தலைமையில், 12 முறை காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் அவர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான தளர்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை தமிழ்நாடு, கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அம்மாவின் அரசு சுமார் 7,323 கோடி ரூபாய்க்கு செலவினங்கள் மேற்கொண்டுள்ளது. இதில் மருத்துவம் சார்ந்த செலவினம் 1,983 கோடி ரூபாய், நிவாரணம் சார்ந்த செலவினம் 5,340 கோடி ரூபாய்.

அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தியும், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்தும், RT-PCR சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றை சிறப்பாக மேற்கொண்டும் வருகிறோம். தற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,40,091 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 27,057 படுக்கைகளும் ICU வசதி கொண்ட 6,106 படுக்கைகளும், 6,492 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன.

நமது மாநிலத்தில் தான் மிக அதிகமாக 184 ஆய்வகங்கள், அதாவது அரசின் சார்பாக 66 ஆய்வகங்களும், தனியார் சார்பாக 118 ஆய்வகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 71,81,125 நபர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19 ஆய்வக பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 85,000 RT-PCR மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனை கருவிகள், என்95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்முடி முகக்கவசங்கள், சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் அம்மாவின் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் 90.50 சதவீதத்துக்கும் மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவான, அதாவது 1.60 சதவீதம் இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டு திட்ட பணியாளர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிபடுத்தியுள்ளது. பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும். கோவிட் RT-PCR பரிசோதனையின் போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அம்மையங்கள் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தை கொண்டு இருந்த போதிலும், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக மறுமுறை உபயோகிக்க தக்க முகக் கவசங்கள் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 46 லட்சம் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக் கவசங்களை சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில், இதுவரை 2.51 கோடி முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி தமிழ்நாட்டில் 1.10.2020 முதல் அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை, இன்றைக்கு மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவ நிபுணர்களுடைய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. அவர்களுடைய கருத்தின் அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்களித்து, முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து, அவர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில், உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் அம்மாவின் அரசு, மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தியது. பின்னர், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 1,63,000 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது. பருவ காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புர/ஊரக பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளை தூர் வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக 1,433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,278 நீர்நிலைகள் புனரமைக்க எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பான்மை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. போதிய அளவில் வேளாண் இடுபொருட்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, வேளாண் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, வரலாறு காணாத அளவிற்கு இந்த ஆண்டு வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஆகஸ்ட் மாத ஆய்வுக் கூட்டத்தில் நான் கூறியதுபோல பருவ மழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள் மற்றும் கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வரலாற்று சாதனையாக அம்மாவின் அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி உள்ளது. நான் ஏற்கனவே கடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியது போல அப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் களஆய்வு செய்து, பணியினை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

அதேபோல, தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதோடு, மக்களுடைய கோரிக்கையை ஏற்று பொதுப் போக்குவரத்தையும் அனுமதிக்கப்பட்டு மக்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தின் மூலமாக பயணம் செய்வதற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதனால், பொதுமக்கள் தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று வருவதற்கும் அம்மாவின் அரசால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதனால், வேலைக்கு செல்பவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன். அதோடு, பல்வேறு ரயில்கள் இயக்குவதற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விமானப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஏற்கனவே இருந்த தடைகளெல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு அரசால் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.