தற்போதைய செய்திகள்

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள்

திண்டுக்கல்

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து விட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று திறந்து விட்டு பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனத்திற்காக இடது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 70 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து 4.4.2021 வரை 90 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன்மூலம் பழனி வட்டத்தில், பெரியம்மாபட்டி, ரவிமங்கலம், தாதநாயக்ன்பட்டி (தெ), நெய்காரபட்டி, சி.கலையம்புத்தூர், பெத்தநாயக்கன்பட்டி, சக்கமநாயக்கன்பட்டி, மானூர், தாதநாயக்கன்பட்டி(வ), சித்தரைகுளம், தாழையூத்து, கொழுமங்கொண்டான், கோரிக்கடவு, கோவில்அம்மாபட்டி, மேல்கரைப்பட்டி மற்றும் அக்கரைப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மொத்தம் 9,600 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

பாலாறு பொருந்தலாறு அணையின் மொத்த நீளம் 2,450 மீட்டர் ஆகும். இதன் கொள்ளளவு 1,524 மில்லியன் கன அடி. அணையின் நீர் பிடிப்பு 259 சதுர கி.மீ., அணையின் மொத்த உயரம் 65 அடி. இன்றைய நிலவரப்படி அணையின் கொள்ளளவு 1,515.40 மில்லியன் கனஅடி. அணையின் நீர்மட்டம் 64.83 அடி, அணையின் இன்றைய நீர்வரத்து வினாடிக்கு 97 கன அடி என்ற அளவில் உள்ளது. மேலும், இந்த அணை பழனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (வடிநிலக்கோட்டம்) கோபி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.