சிறப்பு செய்திகள்

பழவேற்காடு ஏரி தூர்வாரும் பணி விரைவில் துவக்கம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

ரூ 26.85 கோடியில் பழவேற்காடு ஏரி தூர்வாரும் பணி விரைவில் ெதாடங்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மணல்திட்டுக்கள் ஏற்பட்டு முகத்துவாரம் அடைபட்டு விடுகிறது எனவும் இதனால் இப்பகுதி மீனவர்கள் வங்கக் கடலில் சென்று தொழில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது எனவும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தினை தூர்வாரி,நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரி வருகிறார்கள்.

அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் 2020-21 ஆம் நிதியாண்டில் விதி எண் 110 ன் கீழ் திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு கிராமத்தில் ரூ 26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி நேர்கல் சுவர்கள் அமைத்து நிரந்தரமாக நிலைப்படுத்தப்படும் என அறிவிப்பு செய்தார்.

தற்போது அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளன. இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் பழவேற்காடு கிராம மீனவர்கள் ஆண்டு முழுவதும் எவ்வித சிரமும் இன்றி கடலுக்குச் சென்று தொடர்ந்து மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.